டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்டார் பவுலர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயோன் மோர்கன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி ஆகியோருக்கு இடையில் நடந்த மோதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் அன்று, ஷார்ஜாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் இறுதி இன்னிங்க்ஸின் போது, அஷ்வினை வீழ்த்திய பிறகு, டிம் சௌதி ஏதோ பேசியதாகத் தெரிகிறது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீது பந்து பட்டதால், இந்த மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.   


டிம் சௌதி ஏதோ கூற, அதற்கு அஷ்வின் பதிலளிக்க, இந்த வாக்குவாதத்தில் மோர்கனும் இணைந்துகொண்டார். தினேஷ் கார்த்திக் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்துள்ளார். போட்டி முடிவடைந்தவுடன், தினேஷ் கார்த்திக் அஷ்வின் கூடுதலாக ரன்கள் எடுக்க ஓடியது, மோர்கனுக்குப் பிடிக்கவில்லை எனவும், அதனால் அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார். அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், மோர்கன் தன்னை `அவமானம்’ என்று கூறியதாகவும் தான் ஏன் `அவமானம்’ இல்லை என்பதையும் அவர் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார். 



`ஃபீல்டிங்கில் நின்றுகொண்டிருந்தவர் எறிந்த பந்து ரிஷப் மீது பட்டதை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் நான் ரன்களுக்காக ஓடியிருப்பேனா என்று கேட்டால், ஆம் நிச்சயமாக ஓடியிருப்பேன். அதற்கு எனக்கு அனுமதியும் உண்டு. மோர்கன் கூறியது போல நான் ஒரு அவமானமா? நிச்சயமாக இல்லை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அஷ்வின்.






`நான் சண்டையிட்டேனா? இல்லை. நான் எனக்காகவும், எனது ஆசிரியர்களும், பெற்றோரும் எனக்கு சொல்லிக் கொடுத்ததைச் செய்தேன். உங்கள் குழந்தைகளையும் அவர்களுக்காக எதிர்த்து நிற்க கற்றுக் கொடுங்கள். மோர்கன், சௌதி ஆகியோரின் கிரிக்கெட் உலகத்தில் அவர்கள் சரி, தவறு என்று தீர்மானிப்பதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அதற்காக நிற்கலாம். ஆனால் அவர்களைத் தாங்களே உயர்த்திப் பிடித்து, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்த அவர்களுக்கு உரிமையில்லை’ என்றும் அஷ்வின் பதிவிட்டுள்ளார். 



`இதைப் பலரும் விவாதிப்பதும், இங்கு நல்லவர் யார், கெட்டவர் யார் என்று தீர்மானிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன். இங்கு வெவ்வேறு சிந்தனை முறைகளைக் கொண்ட பல லட்ச கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டைச் சிறந்ததாக மாற்றி, தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கிறார்கள். அவர்கள் உங்களை வீழ்த்துவதற்காக மோசமாக வீசிய பந்தின் காரணமாக நீங்கள் கூடுதல் ரன் எடுத்தாலோ, எதிரில் இருப்பவர் ஓடாமல் இருந்தாலோ உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ள அஷ்வின் தொடர்ந்து. `நீங்கள் ரன்களை எடுக்காமல் இருந்து, எதிரில் இருப்பவருக்கு எச்சரிக்கை செய்தால் மட்டுமே உங்களை நல்ல மனிதர் என்று பெயரிடும் வாய்ப்பைப் பெறுபவர்கள் ஏற்கனவே நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள்; வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டு நீங்கள் குழம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார். 


`உங்கள் உயிரைக் கொடுத்து, விளையாட்டின் விதிகளுக்கு உட்பட்டு விளையாடி, போட்டி முடிந்தவுடன் கைகுலுக்கிக் கொள்ளுங்கள். இதுதான் கிரிக்கெட்டின் ஆன்மா என்று நான் புரிந்துகொள்கிறேன்’ என்று தனது விளக்கத்தைக் கூறி, முடித்துள்ளார் அஷ்வின்.