16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.


இன்றைய போட்டி


ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல், 27) நடக்கவுள்ள 3வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் 


ஐபிஎல் போட்டித் தொடர் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. சூதாட்ட விவகாரத்தில் தடை செய்யப்பட்டபோதும் கூட இரு அணியும் ஒரு சேர தடை செய்யப்பட்டது. இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் ஜெய்ப்பூர் மைதானத்தில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி ராஜஸ்தானிடம் நான்கு முறை தோல்வியைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அணியும் சென்னையிடம் மூன்று முறை சரணடைந்துள்ளது. 


சென்னை அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 223. அதே நேரத்தில் குறைந்தபட்ச ஸ்கோர் 126ஆக உள்ளது. அதேபோல் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் 246 ரன்களாக உள்ளது. ஆனால் குறைந்தபட்ச ஸ்கோர் 109. இரு அணிகளும் இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றவேண்டும் என தீவிரமாக ஆடி வருகின்றன.  சென்னை அணியினர் தோனியின் கடைசி சீசன் என்பதால் கோப்பையை அவருக்கு பரிசளிக்க வேண்டும் என ஒரு அணியாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சீசனில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி தோல்வியைச் சந்தித்தது. எனவே, அதற்கு பதிலடி கொடுக்க தீவிரமாக சென்னை அணி செயல்படும். 


மைதானம் எப்படி? 


ஜெய்ப்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருந்தாலும், சுழற்பந்துக்கும் ஏதுவான மைதானமாக இருந்துள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே முடிவு செய்யும். ஜெய்ப்பூரில் உள்ள இந்தூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்கின்றன. இதில் சென்னை அணி ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதால், இந்த போட்டியில் சென்னை அணி வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலேயே இருக்கும். ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும். இன்று இரவு நடக்கும் போட்டி முதல் இடத்துக்கான போட்டியாகத் தான் உள்ளது.