சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்(CSK vs PBKS Tickets ) விற்பனை இன்று நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் ஒரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை இரண்டு முதல் மூன்று நாட்கள் நடைபெறும். ஆனால் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாலும், தோனியின் கடைசி சீசன் என பரவலாக கூறப்பட்டு வருவதாலும், நேரடி கவுண்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை மிகவும் மும்மரமாக நடைபெற்றது. 


16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.


சென்னை அணி முதலிடம்:


தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு தொடரில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுவதால் அவர் விளையாடும் போட்டியை காண ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி நாட்டின் பிற பகுதிகளிலும் சென்னை விளையாடும் போட்டிகளுக்கான, டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்து விடுகின்றன. இந்நிலையில், வரும் 30ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதற்கான டிக்கெட்கள் இன்று காலை 9.30 முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.


டிக்கெட் எங்கு கிடைக்கும்?


சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட், பேடிஎம் மற்றும் www.insider.in எனும் இரண்டு இணையதளங்களிலும், மைதானத்திற்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிக்கெட் விலை விவரங்கள்:


மைதானத்தின் ஐ, ஜே மற்றும் கே ஆகிய ஸ்டேண்ட்களில் கீழ்பகுதியில் உள்ள டிக்கெட் விலை 2500 ரூபாயாக உள்ளது. இந்த வகை டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் கவுன்ட்டரில் கிடைக்கும். சி,டி மற்றும் ஈ ஸ்டேண்ட்களின் மேல் பகுதியில் அமர்ந்து பார்க்கவும், கே.எம்.கே டெரஸில் அமர்ந்து போட்டியை காணவும் டிக்கெட்டுகள் முறையே 3,000 மற்றும் 5ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட  இரண்டு கேலரிகளுக்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்.


சி,டி மற்றும் ஈ ஸ்டேண்ட்களின் கீழ்பகுதியில் அமர்ந்து பார்க்கும் டிக்கெட் விலை 1500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் கவுன்ட்டரில் மட்டுமே கிடைக்கும். ஐ, ஜே மற்றும் கே ஆகிய ஸ்டேண்ட்களில் மேல்பகுதியின் டிக்கெட் 2000 ரூபாயாகும். இந்த வகை டிக்கெட் ஆன்லைன் மற்றும் கவுன்ட்டரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேப்பாக்கத்தில் சென்னை அணி:


சேப்பாக்கத்தில் சென்னை அணி நடப்பு தொடரில் இதுவரை சேப்பாக்கத்தில் 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.