இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தால் நடத்தப்படுவது ஐ.பி.எல். எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இந்தியாவின் முன்னணி வீரர்களுடன் கிறிஸ் கெயில், பொல்லார்ட், பிராவோ, டிவில்லியர்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.


டி-20 போட்டித் தொடரான இந்த ஐ.பி.எல். தொடர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 8 ஐ.பி.எல் அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரில் வருங்காலத்தில் 10 அணிகளை கொண்டு நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.




இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்ட அறிவிப்பில், திரும்ப பெற முடியாத கட்டணமாக ரூபாய் 10 லட்சம் பணம் கட்டி ஐ.பி.எல். தொடரில் இரண்டு அணிகளை சொந்தமாக வாங்கி நடத்துவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கு வரும் அக்டோபர் 5-ந் தேதிதான் கடைசி நாள் ஆகும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அணிகளை வாங்குவதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 10 லட்சம் ஆகும். இந்த தொகையை திரும்ப பெற முடியாது, இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கான அடிப்படை விலை ரூபாய் 2 ஆயிரம் கோடி ஆகும். எந்த அணி ஏலத்தில் அதிக விலையை கேட்கிறதோ அந்த நிறுவனத்துடன் புதிய அணிக்கான ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மேற்கொள்ளும்.


அடிப்படை விலை ரூபாய் 2 ஆயிரம் கோடியாக இருந்தாலும், ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ரூபாய் 3,500 கோடியில் இருந்து ரூபாய் 4 ஆயிரம் கோடிக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி வருமானத்தை கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்கும் நிறுவனம் ஒரே நிறுவனமாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தது மூன்று நிறுவனங்கள் இணைந்து பங்கேற்கலாம். ஆனால், மூன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து பங்கேற்க கூடாது. இந்த ஏலத்தில் குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம், கொல்கத்தாவைச் சேர்ந்த கோயங்கா நிறுவனம், கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனம் என நான்கு நிறுவனங்கள் புதிய அணிகளை வாங்குவதில் தீவிர போட்டியிடுகின்றன.




குஜராத் மற்றும் லக்னோவை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஏல விவகாரத்தில் குஜராத் அணியை அதானி நிறுவனமே வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், எஞ்சிய ஒரு அணியை வாங்குவதற்குதான் பிற நிறுவனங்கள் மத்தியில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்.போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடைவிதித்திருந்த சமயத்தில் குஜராத் லயன்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் ஆடின என்பது குறிப்பிடத்தக்கது.


Ind vs Eng: செஞ்சுரி வேணும் கோலி.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சொன்னது என்ன?!