ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான் என்று அறிவித்துள்ளது. 


விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக பெங்காலை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அபிஷேக் போரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரிஷப் பண்ட் , கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கார் விபத்தில் காயமடைந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், அவர் குணமடைந்து ஓய்வு எடுத்து வருகிறார். 


இதையடுத்து, ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக, வரும் சீசனில் டெல்லி அணிக்கு கேப்டனாக டேவிட் வார்னரும், அக்சர் பட்டேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். 


யார் இந்த அபிஷேக் போரல்..? 


கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் தேர்வான அபிஷேக் போரல், பெரிதாக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. விருத்திமான் சஹா வங்காள அணியிலிருந்து வெளியேறியபோது அபிஷேக் போரலுக்கு விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் போரல் இதுவரை 16 முதல் தர போட்டிகளில் விளையாடி 695 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை சதம் எதுவும் அடிக்கவில்லை என்றாலும், ஆறு அரைசதங்கள் அடித்துள்ளார். அதேபோல், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ரஞ்சி கோப்பையில் தடுமாறிய போதெல்லாம் ஷாபாஸ் அகமதுவுடன் இணைந்து பல போட்டிகளில் நம்பிக்கை அளித்தார். 


ரஞ்சிக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில் 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, மத்திய பிரதேசத்திற்கு எதிராக 51 ரன்களும், இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக 50 ரன்களும் எடுத்தார். 


டெல்லி அணி நிர்வாகம் இவரது பங்கள்ப்பு குறித்து பேசுகையில், “போரல் வார்ம் அப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இளம் வீரர். டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க சீசனில் சர்ஃபராஸ் கான் விக்கெட் கீப்பிங் செய்வார்.” என தெரிவித்தது. 


ஐபிஎல் 2023க்கான டெல்லி கேபிடல்ஸ் அணி: வார்னர் (கேப்டன்), அக்ஸார் படேல், பிரித்வி ஷா, அன்ர்ச் நோர்கியா, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், கமலேஷ் நாகர்கோட்டி, முஸ்தாபிஷூர் ரஹ்மான், குல்தீப் யாதவ், கலீல் அகமது, சேத்தன் சகாரியா, ஆர் லலிப் பட்டவேல் துல், ரோவ்மேன் பவல், பிரவீன் துபே, லுங்கி என்கிடி, விக்கி ஓஸ்ட்வால், அமன் கான், பில் சால்ட், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், மணீஷ் பாண்டே, ரிலே ரோசோவ், அபிஷேக் போரல்