சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு, முக்கியமான வீரராக வலம் வருபவர் சுரேஷ் ரெய்னா. `சின்ன தல’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரெய்னா ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். பல போட்டிகளில் சென்னை அணிக்கு தனி ஆளாக வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.


ஐ.பி.எல். தொடரில் இதுவரை 199 ஆட்டங்களில் ஆடியுள்ள ரெய்னா மொத்தம் 5 ஆயிரத்து 489 ரன்களை குவித்துள்ளார். ஒரு போட்டியில் மட்டும் தனது அதிகபட்சமாக 100 ரன்களை குவித்துள்ளார். இதுவரை மொத்தமாக 39 அரைசதங்கள் , 1 சதத்தை குவித்துள்ள சுரேஷ் ரெய்னா கடந்த போட்டியில் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்காக களமிறங்கி 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.




இந்த ஆட்டத்திற்கு முன்னதாக, ஐ.பி.எல். தொடரில் மட்டும் ரெய்னா 499 பவுண்டரிகளை அடித்திருந்தார். இந்த போட்டியில் 3 பவுண்டரிகள் அடித்தது மூலம் ரெய்னா, ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளிலும் 502 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 4-வது இடத்தில் உள்ளார். 181 ஆட்டங்களில் ஆடியுள்ள ஷிகர் தவான் 624 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.