பி.வி.சிந்து பேட்மிண்டனில் பல சாதனைகளை செய்திருக்கும் இளம் வீராங்கனை. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் இரண்டு பதக்கங்களை அதுவும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ்களில் வென்ற ஒரே பெண் எனும் பெருமையை பெற்றவர். 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் இறுதிப்போட்டியில் தோற்று வெள்ளி வென்றிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றிருந்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் பதக்கம் வெல்லும் முனைப்போடு பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்த பயணத்தின் ஆரம்பமே கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது.



டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்கு பிறகு பி.வி.சிந்து நான்கு தொடர்களில் ஆடியிருக்கிறார். இந்த நான்கு தொடர்களிலுமே மூன்றில் அரையிறுதி வரையும் ஒன்றில் காலிறுதி வரையும் முன்னேறி தோற்றுள்ளார்.


இந்தோனேசிய ஓபனின் அரையிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றிருந்தது. இதில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனோனை பி.வி.சிந்து எதிர்கொண்டிருந்தார். இந்த தொடர் முழுக்க சிந்து சிறப்பாக ஆடியிருந்தார். காலிறுதியில் சிம் யுஜினுக்கு எதிரான போட்டியில் முதல் செட்டை இழந்திருந்த போதும் மீண்டு வந்து அடுத்த இரண்டு செட்களை வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இந்த தொடரின் முதல் போட்டியிலுமே இப்படித்தான் முதல் செட்டை தோற்று அடுத்த இரண்டையும் வென்று போட்டியை தனதாக்கியிருப்பார். இந்நிலையில் ரட்சனோக்கிற்கு எதிரான அரையிறுதியில் நேற்று முதல் செட்டை 21-15 என சிந்துவே வென்றிருந்தார். அதனால் எப்படியும் போட்டியை வென்று இறுதிப்போட்டி வரை சென்றுவிடுவார் என நம்பப்பட்டது. ஆனால், நடந்தது வேறு. அடுத்த இரண்டு செட்களையும் 21-9, 21-14 என ரட்சனோக் வெல்லவே சிந்து அரையிறுதியோடு தோற்று வெளியேறினார்.



இதற்கு முன் நடைபெற்ற இந்தோனேஷியா மாஸ்டர் தொடரில் அரையிறுயிதியில் ஜப்பானின் யமகுச்சியுடன் மோதியிருந்தார். இருவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸின் காலிறுதி போட்டியிலும் மோதியிருந்தனர். அதில், யமகுச்சியை தோற்கடித்து சிந்து அதிரடியாக அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். ஆனால், இந்த இந்தோனேஷியா மாஸ்டரில் யமகுச்சியிடம் 21-13, 21-9 என நேர் செட் கணக்கில் வீழ்ந்திருந்தார்.


அதற்கு முன் ஃப்ரென்ச் ஓபனிலும் ஜப்பானை சேர்ந்த டக்காஷியிடம் அரையிறுதியில் முதல் செட்டை வென்ற போதும் அடுத்த இரண்டு செட்களையும் இழந்து தோற்றிருப்பார்.


ஒலிம்பிக்ஸ் முடிந்தவுடன் சிந்து பங்கேற்ற டென்மார்க் ஓபனில் காலிறுதியில் ஆன் சியாங்கிடம் தோற்றிருந்தார்.


இப்படி ஒலிம்பிக்ஸிற்கு பிறகு சிந்து பங்கேற்ற நான்கு தொடர்களிலுமே இறுதிப்போட்டியை நெருங்கி வந்து கோட்டை விட்டிருக்கிறார்.


டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்கு முன்புமே சிந்து சரியான ஃபார்மில் இருந்திருக்கவில்லை. தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டேதான் இருந்தார். கடைசியாக 2019 ஆகஸ்ட்டில் BWF உலக சாம்பியன்ஷிப்பில் நோசோமி ஓகுகாராவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகான தொடர்களில் பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவே இல்லை. சுவிஸ் ஓபனில் மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார். அதிலும் கரோலினா மரினிடம் தோற்றிருந்தார்.



டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நுழையும் முன்பாக சிந்துவின் மீது பெரிதாக யாருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த முறை பதக்கம் சந்தேகம்தான் எனும் பேச்சே இருந்தது. சிந்துவின் ஃபார்மும் அந்தளவுக்குத்தான் இருந்தது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் சிந்து ஒலிம்பிக்ஸில் பட்டையை கிளப்பியிருந்தார். அரையிறுதியில் தாய் சூ யிங்கிடம் மட்டுமே தோற்றிருந்தார். மற்றபடி ஆடிய அத்தனை போட்டிகளிலும் எதிராளிக்கு ஒரு செட்டை கூட விட்டுக்கொடுக்காமல் வென்றிருந்தார்.


அப்படி வெறித்தனமாக ஆடிய சிந்துc ஒலிம்பிக்ஸிற்கு பிறகு நாக் அவுட் சுற்றுகளில் தொடர் தோல்விகளை சந்திப்பது வருத்தமளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. சிந்து சீக்கிரமே கம்பேக் கொடுத்து அதகளப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண