கி.பி. 13ஆம் ஆண்டு முதலே பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மல்யுத்தப் போட்டி இருந்ததாக வரலாற்றுச் சிற்பங்கள் கூறகின்றன். அப்போது அங்கீகரிக்கப்பட்ட போட்டியாக கருதாமல் ஒரு பொழுதுபோக்காக திருவிழாக்களின்போதும், பல்வேறு நிகழ்ச்சிகளின்போதும் மல்யுத்தம் இருந்தது. முதன்முதலாக 1888 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் தேசிய மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. பின்னர், 1904 மிசௌரி ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது மல்யுத்தப் போட்டி. 1912 ஆம் ஆண்டில்  உலக மல்யுத்த சங்கம் பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது.



 

மண் மற்றும் புல்தரையில் மட்டுமே நடைபெற்று வந்த மல்யுத்தப் போட்டி, தற்போது உள் விளையாட்டு அரங்கில் அதற்கான பிரத்யேக ரப்பர் விரிப்பில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக், உலக போட்டிகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மல்யுத்த போட்டிகள் அனைத்தும் உள்விளையாட்டரங்கிலேயே நடைபெற்று வருகிறது. மல்யுத்தத்தின் ஒரு பிரிவான கடற்கரை மல்யுத்தம், அண்மைக்காலங்களில் அதிக கவனம் பெற்றுவரும் விளையாட்டாக மாறியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இதற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகின்றன.

 

கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லத் தகுந்த அளவிலான வளர்ச்சியைப் பெற்றுள்ள இந்த விளையாட்டு, 2024-ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கடற்கரை மல்யுத்த வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதன்முறையாக தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.



இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் இன்று முதல் 30 வரை மாமல்லபுரத்தில் உள்ள அரசு பீச் ரெசார்ட் வளாகத்தில் இந்த தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தன . ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 70, 80, 90, 90+ கிலோ என நான்கு வகைகளிலும், மகளிருக்கான பிரிவில் 50, 60, 70, 70+ கிலோ என நான்கு வகைகளிலும் போட்டிகள் நடைபெற்று.இந்திய மல்யுத்த சங்கத்தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் இன்று இப்போட்டியைத் துவங்கி வைத்தார். 



ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ,ஹரியானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி  உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று கடற்கரை மணலில் மல்லுகட்டினர். மல்யுத்தம் என்றாலே வட நாட்டு வீரர்கள் தான் நமக்கு நினைவுக்கு வருவார்கள். அதேபோல் கடற்கரை மல்யுத்த போட்டியிலும் வடநாட்டை சேர்ந்தவர்களே அதிகளவு பதக்கத்தை வென்று உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக களைகட்டிய இந்த போட்டியில் ஹரியானா 3 தங்கம், 2 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா இரண்டு தங்கமும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ஒரு தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இருந்தும் தமிழக வீரர்கள் அவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.



இதுகுறித்து மல்யுத்த வீராங்கனை ஹரிப்பிரியா தெரிவிக்கையில், தமிழகம் தற்போது முதல் முறையாக தேசிய அளவில் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்று இருப்பதால், மல்யுத்த வீரர்களுக்கு உற்சாகம் கிடைத்துள்ளது. இனிவரும் காலத்தில் தமிழகத்தில் முறையான பயிற்சி சத்தான உணவுகள் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் நிறைய வெற்றிகள் பெறுவோம் என தெரிவித்தார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மல்யுத்த வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

 

மல்லியுத்தத்திற்கு என்று தமிழகத்தில் முறையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, வீர வீராங்கனைகளை ஊக்குவித்தால் நிச்சயம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், உலக அளவில் ஜொலிப்பார்கள் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.