இந்திய மகளிர் கிரிக்கெட் ஒருநாள் அணியின் கேப்டனாக மித்தாலி ராஜ் இருந்து வருகிறார். இவர் கிட்டதட்ட 21 ஆண்டுகாலம் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்று ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் தனது ஓய்வு குறித்த முடிவை முதல் முறையாக அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக மித்தாலி ராஜ், “2022-ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரே என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கும். 21 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய கிரிக்கெட்  பயணம் தொடர்ந்துள்ளது. கடைசி ஆண்டு என்னுடைய 20 ஆண்டுகளுக்கு சமமானது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நேரத்தில் உடற்தகுதியுடன் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அதிலும் எனக்கு பெரிய சவாலான விஷயம். ஏனென்றால் எனக்கு வயது அதிகமாகி வருகிறது. இந்தச் சூழலில் கிரிக்கெட் போட்டியில் விளையாட உடற்தகுதி எனக்கு மிகவும் அவசியமான ஒன்று. 




மேலும் 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஒரு சில தொடர்கள் மட்டுமே உள்ளன. எனவே உலகக் கோப்பைக்கு சிறப்பான அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. என்னை பொறுத்தவரை இந்திய மகளிர் தற்போது பந்துவீச்சில்தான் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும். ஜூலன் கோசாமியும் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டார். எனவே இந்திய அணிக்கு தற்போது நல்ல வேகப்பந்துவீச்சாளர் கிடைத்தால் நன்றாக இருக்கும். மேலும் நியூசிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றவகையில் தற்போது இருந்தே வீராங்கனைகளை தேர்வு செய்து தயார் படுத்தவேண்டும்” எனக் கூறினார்.


மித்தாலி ராஜ் இந்திய அணிக்காக முதல் முறையாக 1999-ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் களமிறங்கினார். அதன்பின்னர் தனது 22 வயதில் இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் போட்டியில் வழிநடத்தி மிகவும் குறைந்த வயதில் கேப்டன் என்ற சாதனையை படைத்தார். 2019-ஆம் ஆண்டு T20 போட்டிகளிலிருந்து மித்தாலி ராஜ் ஓய்வு பெற்றார். 




மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே வீராங்கனை மித்தாலிராஜ் தான். அத்துடன் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை இரண்டு முறை வழி நடத்திய ஒரே கேப்டனும் மித்தாலி ராஜ்தான். இதுவரை இரண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்று இருந்தாலும் இவர் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனையுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.