உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் போலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்று உள்ளன. இதில் இந்திய மகளிர் அணி 7 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 48 கிலோ எடைப்பிரிவில் கீத்திகா போலாந்து நாட்டின் நாடாலியாவை இறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கம் வென்றார். 51 கிலோ எடைப் பிரிவில் பேபி ரோசனா சானு இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் லின்கோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
57 கிலோ எடைப்பிரிவில் பூனம் இறுதிப்போட்டியில் 5-0 என்ற கணக்கில் பிரான்சு நாட்டின் ஸ்தேலின் கோஷியை வீழ்த்தி மூன்றாவது தங்கத்தை வென்றார். மேலும் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் வின்கா கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை ஷாயாக் மேத்தாவை கடைசி சுற்றில் நாக்-அவுட் செய்து நான்காவது தங்கப்பதக்கத்தை வென்றார்.
69 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி செளத்ரி போலாந்து நாட்டின் பார்பராவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி 5-வது தங்கத்தை வென்றார். பின்னர் 75 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் சானாமச்சு சானு கஜகஸ்தான் வீராங்கனை டானா டிடேவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு வீராங்கனைகளும் சமமாக சண்டை செய்தனர். இறுதிச்சுற்றில் சற்று சுதாரித்து கொண்ட சானு கஜஸ்கஸ்தான் வீராங்கனையை சிறப்பாக எதிர்கொண்டார். இதனால் 3-2 என்ற கணக்கில் டிடேவை வீழ்த்தி சானு 6ஆவது தங்கத்தை வென்று அசத்தினார். இதற்கு பின்பு 81 கிலோவிற்கு மேல் உள்ள எடைப்பிரிவில் இந்தியாவின் அல்ஃபியா பதான் மால்டோவா நாட்டின் டரியாவை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் எளிதாக டரியாவை வீழ்த்தி பதான் 7ஆவது தங்கப் பதக்கதை வென்றார்.
இதற்கு முன்பாக 2017-ஆம் ஆண்டு அசாமில் நடைபெற்ற உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியா 5 தங்கப்பதக்கம் வென்று இருந்தது. இதுவே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. தற்போது அதனை முறியடித்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
முன்னதாக ஆடவர் பிரிவில் இந்திய அணி மூன்று வெண்கல பதக்கங்களை வென்றது. பிஸ்வாமித்ரா சோங்தம் (49 கிலோ எடைப் பிரிவு), அன்கித் நர்வால் (64 கிலோ எடைப் பிரிவு), விஷால் குப்தா (91 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் வென்றனர். ஆடவர் 56 கிலோ எடைப்பிரிவில் சச்சின் சிவாச்சி மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் இவர் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.