டூட்டி சந்த் - பாலின விளக்கம்:


பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரியான டூட்டி சந்த், தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த இந்தியாவின் முதல் தடகள வீராங்கனையும் ஆவார். கடந்த 2019ம் ஆண்டு ஒடிஷாவில் உள்ள தனது சொந்த ஊரைச் சேர்ந்த மோனாலிஷா என்பவரை தான் காதலிப்பதாக பொதுவெளியில் அறிவிக்க, நாடு முழுவதும் அது பேசுபொருளானது. மோனாலிஷாவுடன் தனது வாழ்க்கையை தொடர உள்ளதாக டூட்டி சந்த் முதன்முறையாக தெரிவித்தபோது, அவரது குடும்படுத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, டூட்டி சந்த் தனது குடும்பத்தினரை சமாதானப்டுத்தியதாக கூறப்படுகிறது.


”பாலினத்தை பொறுத்தது அல்ல காதல்”


ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த பிறகு தன் மீதான  சமூகத்தின் பார்வை மாறுபட்டு இருந்ததாகவும், அனால் அது தன்னை ஒருபோதும் பாதிக்கவில்லை எனவும் கூறினார்.  ஒருவர் எப்போது வேண்டுமானாலும் யாருடனும் காதலில் விழலாம். ஜாதி, மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் ஒருவர் அதை முடிவு செய்வதில்லை எனவும் டூட்டி சந்த் தெரிவித்து இருந்தார்.






டூட்டி சந்தின் வைரல் பதிவு:


இந்நிலையில் தான், தனது சகோதரியின் திருமணத்தில் காதலி மோனாலிஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, டூட்டி சந்த் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், LOVE IS LOVE  எனவும் குறிப்பிட்டுள்ளார். புத்தாடைகளை அணிந்து அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.


டூட்டி சந்தின் சாதானைகள்:


ஒடிசாவை சேர்ந்த 24 வயதான டூட்டி சந்த். ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ, 200 மீ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாப்போலியில் நடந்த யுனிவர்சியேடில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். பி.டி. உஷாவிற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கடந்த 2016 ஒலிம்பிக் தொடரில் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் டூட்டி சந்த் பெற்றுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 11.17 வினாடிகளில் கடந்து, தேசிய அளவிலான சாதனையையும் டூட்டி சந்த் தன்னகத்தே வைத்துள்ளார்.


பாலின விவகாரம்:


2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில்தான், டூட்டி சந்த் பாலின விவகாரத்தில் சிக்கினார். அவரிடம் ஆண்தன்மைக்குரிய ஹார்மோன் அதிகமாக இருப்பதாக கூறி தடகள போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் டூட்டி சந்த் முறையிட,  இந்திய விளையாட்டு ஆணையமும் அவருக்கு ஆதரவு தெரிவித்தது. சர்வதேச வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு 2015ம் ஆண்டு, டூட்டி சந்த் மீதான தடை விலக்கி கொள்ளப்பட்டது. அதைதொடர்ந்து, 2016 ரியோ விளையாட்டுப் போட்டிகளில் டூட்டி சந்த் பங்கேற்றார். மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.