இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இங்கிலாந்து அணியினர் இந்திய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 125 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. கே.எல்.ராகுல் 57* ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி சற்று தாமதமானது. மழை நின்றவுடன் மீண்டும் போட்டி தொடங்கிய போது ரிஷப் பண்ட் 25 ரன்களுடன் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 145 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. அப்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா களத்திற்கு வந்தார். அவரும் கே.எல்.ராகுலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்டியது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 8 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. 

இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா 15 ரன்கள் அடித்த போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2000 ரன்களை கடந்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 விக்கெட்கள் மற்றும் 2000 ரன்கள் ஆகியவற்றை அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தப் பட்டியலில் மிகவும் குறைவான போட்டிகளில் அடித்த நான்காவது வீரர் என்ற சிறப்பையும் ஜடேஜா பெற்றார். 

குறைவான போட்டியில் டெஸ்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட் எடுத்த வீரர்கள்:

வீரர்கள்  போட்டிகள்
இயான் பாத்தம்  42
கபில்தேவ் 50
இம்ரான் கான்  50
ரவிச்சந்திரன் அஸ்வின் 51
ரவீந்திர ஜடேஜா 53

ரவீந்திர ஜடேஜா தன்னுடைய 53ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தச் சாதனையை படைத்துள்ளார். அவருக்கு முன்பாக இந்தியாவின் கபில் தேவ் 50 டெஸ்ட் போட்டிகளிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 51 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.மேலும் ரவீந்திர ஜடேஜா 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

மேலும் படிக்க: ஆடவர் 400 மீட்டர் ரிலே : புதிய ஆசிய சாதனை படைத்த இந்திய அணி !