இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. இவர் உலகளவில் தலைசிறந்த வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தந்தை ஒரு கைப்பந்து வீரர் என்பதால் விளையாட்டு இவருடைய இரத்தில் கலந்த ஒன்றாக அமைந்தது. இதனால் சிறுவயது முதல் பேட்மிண்டன் பயிற்சி மேற்கொண்டு சிறந்து விளங்க தொடங்கினார். சிறுவயதிலேயே பல சாதனைகளையும் படைக்க ஆரம்பித்தார். இன்று பி.வி.சிந்து தனது  26-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிந்து உலகை வியக்கவைத்த தருணங்களைப் பார்க்கலாம்.


2013 மலேசிய ஓபன்:




2013ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பேட்மிண்டன் தொடரில் 17 வயது பி.வி.சிந்து பங்கேற்றார். அந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி பலரை வியக்க வைத்தார். தரவரிசையில் 3ஆம் நிலை வீராங்கனையை அரையிறுதியில் தோற்கடித்து அசத்தினார். அதன்பின்னர் இறுதி போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜுவானை 21-17,17-21,21-19 என்ற கணக்கில் வீழ்த்தி தன்னுடைய முதல் சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தை வென்றார். 


 


2 உலக சாம்பியன்ஷிப் வெண்கலப்பதக்கம்:




2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் ஒலிம்பிக் வெள்ளி பதக்க வீராங்கனையான வாங் யிஹானை தோற்கடித்து அசத்தினார். இந்தத் தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்தது வெண்கலப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார். இதேபோல் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரிலும் வெண்கலம் வென்றார். இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில்களில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 


 


2016 ரியோ ஒலிம்பிக்:




பி.வி.சிந்துவின் பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் இதுவாகும். 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரினை எதிர்த்து விளையாடினார். முதல் முறையாக ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை ஒருவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் 116ஆண்டு கால ஒலிம்பிக் பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது அதுவே முதல் முறையாகும். அந்தப் போட்டியில் போராடி பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். எனினும் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தார். 


சீன சூப்பர் சீரிஸ் ஓபன் 2016:


2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கு பிறகு  நடைபெற்ற சீன சூப்பர் சீரிஸ் ஓபன் தொடரில் சிந்து  பங்கேற்றார். இந்தத் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 7ஆம் இடத்தில் இருந்த சிந்து 8ஆம் இடத்தில் இருந்த சீனாவின் சுன் யூவை எதிர்த்து களமிறங்கினார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை 21-11,17-21,21-11 என்ற கணக்கில் சிந்து வென்றார். இது சிந்துவின் முதல் சூப்பர் சீரிஸ் பட்டமாகும். அத்துடன் சீனா ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரை வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் சிந்து பெற்றார். இதற்கு முன்பாக சாய்னா நேவால் 2014ஆம் ஆண்டு இத்தொடரை வென்று இருந்தார். 


2019 உலக சாம்பியன்ஷிப்:




2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கிய சிந்து தரவரிசையில் தன்னைவிட முன்னிலையில் இருந்த வீராங்கனை தோற்கடித்து அசத்தினார். குறிப்பாக காலிறுதிப் போட்டியில் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையான டைசு யிங்கை போராடி வென்றார். அதன்பின்னர் இறுதிப் போட்டியில் தரவரிசையில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமியை 21-7,21-7 என்று எளிதாக வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்தார். 


இந்த வெற்றி தருணங்கள் வரிசையில் டோக்கியோ ஒலிம்பிக் தங்கம் பதக்கமும் இடம்பெற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிந்துவிற்கு அதுவே இந்தாண்டின் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமையும். 


மேலும் படிக்க: விண்டேஜ் கார்.. திருமண நாளில் மனைவிக்கு தோனி கொடுத்த அசத்தல் பரிசு!