ஆசிய கோப்பை 2022 ஹாக்கி தொடர் இன்று இந்தோனேஷியாவில் தொடங்கியது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதற்கு முன்பு வரை 8 முறை மோதியிருந்தன. அதில் இந்தியா மூன்று முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வெற்றி பெற்று இருந்தன. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 2 முறையும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 


 


இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் முதல் கால்பாதியில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்தது. அதன்பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணி முதல் கோலை அடித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது வீரர் கார்த்தி செல்வம் முதல் கோலை அடித்தார். இதன்காரணமாக முதல் கால்பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 


 


இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். குறிப்பாக பாகிஸ்தான் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் இந்திய கோல் கீப்பர் சூரஜ் சிறப்பாக தடுத்தார். பாகிஸ்தான் அணி தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது. முதல் பாதியின் முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. 


மூன்றாவது கால்பாதியில் பாகிஸ்தான் அணி தொடக்கத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. எனினும் அப்போது இந்திய அணியின் கோல் கீப்பர் சூரஜ் சிறப்பாக செயல்பட்டு கோல் அடிக்கவிடாமல் தடுத்தார். மூன்றாவது கால்பாதியில் கிடைத்த அனைத்து பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய அணி கோல் அடிக்காமல் வீணடித்தது. 


நான்காவது மற்றும் கடைசி கால்பாதியில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி கால்பாதியிலும் பாகிஸ்தான் அணி சிறப்பாக தொடங்கியது. கடைசி கால்பாதியில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர்.  ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்து 1-1 என சமன் செய்தது. ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண