செப்டம்பர் - 6! இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது. 50 ஆண்டுக்கால காத்திருப்புக்கு கோலி தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், 157 ரன் வித்தியாசத்தில் போட்டியை வென்ற இந்திய அணி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்றுள்ளது. இந்த போட்டியை வென்றதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 


இந்த ரெக்கார்டு மட்டுமின்றி, ஐந்து நாட்களும் இந்திய அணி சார்பில் பல்வேறு ரெக்கார்டுகள் சத்தமில்லாமல் பதிவு செய்யப்பட்டது. ரோஹித்தின் 15,000 ரன்கள், பும்ரா 100 விக்கெட்டுகள் என இன்னும் பல சுவாரஸ்யமான ரெக்கார்டுகள் இந்த போட்டியில் உள்ளடக்கம். அந்த லிஸ்ட் இதோ!


ஓவலில் இந்தியா:



1971-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் டிராவாகவே, மூன்றாவது போட்டியை வென்று இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அப்போதைய இந்திய அணி கேப்டனாக அஜித் வடேக்கர் தலைமை வகித்தார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓவல் மைதானத்தில் இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 






கோலி கேப்டன்சி


கடைசியாக 1986-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில்தான் இந்திய அணி ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளை வென்றது..அதுமட்டுமின்றி, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்றது. இந்த சாதனையை முறியடித்திருக்கும் கேப்டன் கோலி, அவர் தலைமையில் மூன்று வெற்றிகளை இங்கிலாந்தில் பதிவு செய்துள்ளார்.


பேட்ஸ்மேன் கோலி


சர்வதேச கிரிக்கெட்டில் 23,000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். 490 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23,000 ரன்களை கடந்த வீரரானார். சச்சினை பொருத்தவரை, 522 இன்னிங்ஸில் 23,000 ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டில், 70 சதங்கள், 110 அரை சதங்களை அடித்திருக்கிறார் கோலி. அவரது பேட்டிங் சராசரி 55-க்கும் மேல் உள்ளது. 


பும்ரா 100 விக்கெட்டுகள்






இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரரானார் பும்ரா. 24* டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். 25 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து கபில் தேவ் இரண்டாம் இடத்திலும், 28 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்து இர்ஃபான் பதான் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.


ரோஹித் ஷர்மா 15,000 & அவே சீரீஸ் சதம்


நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, 1 சிக்சர், 12 பவுண்டரிகள் என 205 பந்துகளில் சதம் கடந்தார் ஹிட்-மேன் ரோஹித். இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளூர் மைதானங்களில் மட்டும் 7 சதங்களை அடித்துள்ள ரோஹித், முதல் முறையாக ஓவர்சீஸ் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் 127 ரன்கள் அடித்து பெவிலியின் திரும்பினார் ரோஹித். அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்கள் கடந்து அடுத்த மைல்கல்லை எட்டியுள்ளார் ரோஹித்.


ஷர்துல் தாகூர் 50


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிவேகமாக அரை சதம் கடந்தவர்களின் பட்டியலில் ஷர்துல் தாகூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 31 பந்துகளில் அரை சதம் கடந்தார் ஷர்துல். முன்னதாக 1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் கபில் தேவும், 2008-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் சேவாக்கும் அரை சதம் கடந்துள்ளனர்.


உமேஷ் யாதவ் 150






நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் போட்டியின்போது, ஓவர்டன் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து ரன் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை போட்டார் உமேஷ் யாதவ். இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உமேஷ் யாதவின் 150-வது விக்கெட்.