இந்திய-இலங்கை அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. முக்கியத்துவம் இல்லை என்றாலும் கடைசி ஒருநாள் போட்டியையும் வென்று மொத்தமாக தொடரை கைப்பற்ற மும்முரமாக உள்ளது இந்திய அணி. இந்த போட்டியிலாவது வெற்றி பெற்று, ஆறுதல் வெற்றி பெற துடிக்கிறது இலங்கை அணி.


பரபரப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ப்ரித்வி ஷா நிலைத்து ஆட, ஷிகர் தவன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஒன் டவுன் களமிறங்கிய சஞ்சு சாம்சன், நிதானமாக ரன் சேர்த்தார்.






ஆனால், 49 ரன்கள் எடுத்திருந்தபோது ப்ரித்வி ஷாவும், 46 ரன்கள் எடுத்திருந்தபோது சஞ்சு சாம்சனும் அவுட்டாகினர். அதனை தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. 






சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றபின் போட்டி தொடங்கியது. அப்போது ஓவ்வொரு அணிக்கு தலா 3 ஓவர்கள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 47 ஓவர்கள் இந்திய அணி விளையாடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மழைக்கு பிறகு மீண்டும் போட்டி தொடங்கியபோது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால், 200 ரன்களை எட்டுமா என்ற நிலை இருந்தது.






சூர்யகுமார் யாதவ் மட்டும் நிதானமாக களத்தில் நின்று ரன் சேர்த்தார். சூர்யகுமாரும் 40 ரன்கள் எடுத்திருந்தபோது தனஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்களை தனஜெயா சொற்ப்ப ரன்களுக்கு அவுட்டாக்கினார். இலங்கை அணியைப் பொருத்தவரை, தனஜெயா மற்றும் ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் அறிமுக வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கெளதம் ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர். 






இதனால், 43.1 ஓவர்களின் போதே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 225 ரன்கள் எடுத்தது. எனவே, இலங்கை அணி 47 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற வேண்டும். அறிமுக இந்திய வீரர்கள் ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கெளதம், சேத்தன் சகாரியா ஆகியோர் பெளலிங்கில் மேஜிக் செய்வார்களா என பொருத்திருந்து பார்ப்போம்.