இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி, இந்த தொடரை வெல்லப்போவது யார் என முடிவு செய்யப்போகும் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான், ரூத்துராஜ் சொதப்பலாக ஆடினர். வந்த வேகத்தில், கோல்டன் டக்-அவுட்டாகி தவான் பெவிலியன் திரும்ப, அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அவுட்டாகினர். 


தவான், ரூத்துராஜ் ஆகியோரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, படிக்கல் என பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்காமல் சொதப்பினர். இதனால், மடமடவென சரிந்த டாப்-ஆர்டரால் அடுத்து களமிறங்கிய மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்து ரன் எடுப்பது சவாலாக இருந்தது. இதனால், 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 81 ரன்களை எடுத்தது இந்திய அணி. சர்வதேச டி-20 கிரிக்கெட்டில், மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை இந்திய அணி இன்று பதிவு செய்தது. 


இன்றைய போட்டியில், இலங்கை அணியின் பெளலிங் யூனிட்டை லீட் செய்தது வானிண்டு ஹசரங்கா. ஆல்-ரவுண்டரான இவர், இன்றைக்கு தனது 24வது பிறந்த்நாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாள் அன்று, ஒரே இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணியின் பேட்டிங்கை துவம்சம் செய்துள்ளார். 






இன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸின்போது, 4 ஓவர்களை வீசிய ஹசரங்கா, வெறும் 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் தனது பெஸ்ட் ஸ்பெல்லை இன்று பதிவு செய்த அவர், இன்றைய போட்டியை இலங்கை அணியின் பக்கம் சாதகமாக முக்கிய காரணமானார். இதற்கு முன்பு, வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான டி-20 போட்டியில், 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்ததே ஹசரங்காவின் கரியர் பெஸ்டாக இருந்தது. 






இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஹசரங்கா, தற்போது சர்வதேச டி-20 கிரிக்கெட் பெளலர்களின் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வரும் ஹசரங்கா, இலங்கை ரசிகர்களின் தற்போதைய ஃபேவரைட்டும் கூட. விக்கெட்டுகளை எடுப்பதைவிட, எகனாமியாய் பந்துவீசி எதிரணியை கதிகலங்க வைத்திடுவார் ஹசரங்கா. இலங்கை அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக உருவாகி வரும் ஹசரங்கா, ஒரு வேளை இலங்கை அணி உலக கோப்பை டி-20 தொடருக்கு தேர்வானால், இலங்கை அணியின் ட்ரம்ப் கார்டாக கருதப்படுவார். வாழ்த்துகள் ஹசரங்கா!