IND VS PAK: ஹாக்கியில் அதிசயம்.. பாகிஸ்தான் வீரர்களுடன் HiFi சொன்ன இந்திய வீரர்கள்!
மலேசியாவில் நடந்த ஜுனியர் ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் ஹைஃபை சொல்லிக் கொண்டனர்.

இந்தியாவில் இருந்து பிறந்த நாடாக பாகிஸ்தான் இருந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் உறவு ஒருபோதும் சுமூகமாக இருந்தது இல்லை. பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் போர் வரை சென்றது. இது விளையாட்டிலும் எதிரொலித்தது.
இந்தியா - பாகிஸ்தான்:
சமீபத்தில் துபாயில் நடந்த ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் இரு அணி கேப்டன்கள், வீரர்கள் கை குலுக்கிக் கொள்ளவில்லை. மேலும், இந்த தொடரில் இரு அணி வீரர்களும் சைகைகளால் மோதிக் கொண்டதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஹைஃபை:
இந்த சூழலில், மலேசியாவில் உள்ள ஜோஹோர் பக்ரூவில் சுல்தான் ஆஃப் ஜோஹோர் கப் ஹாக்கித் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு அணியினரும் மோதினர். இந்த போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த போட்டி முடிந்த பிறகு இரு நாட்டு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் ஹைஃபை கூறி தங்கள் கரங்களால் தட்டிக் கொண்டனர். இது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டு வீரர்களும் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இவ்வாறு நடந்து கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பகைமையை மறக்க வைக்கும் விளையாட்டு:
கிரிக்கெட் போட்டியின்போது இரு அணி வீரர்களும் சைகைகளால் மோதிக்கொண்டதும், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் மோதலை உண்டாக்கியது. இந்த சூழலில், கிரிக்கெட்டில் நிகழாத ஒன்று ஹாக்கியில் நிகழ்ந்திருப்பதை பலரும் பாராட்டியுள்ளனர்.
ஏனென்றால், விளையாட்டு என்பது பகைமையை மறந்து ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. ஆனால், அந்த விளையாட்டிலும் பகைமையை வளர்க்கும் விதமாக மோதிக் கொள்வது ரசிகர்கள் மத்தியில் வேதனையை அதிகரிக்கிறது. இரு நாட்டு ஹாக்கி வீரர்களின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், சிலர் பாகிஸ்தான் வீரர்களுக்கு எப்படி ஹைஃபை சொல்லலாம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், சிலர் தீவிரவாதத்தைதான் இந்தியா எதிர்க்கிறது என்றும், மற்ற நாட்டு மக்களை எப்போதும் நேசிக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
த்ரில் போட்டி:
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற நிலையில், பெனால்டி ஸ்ட்ரோக் மூலமாக இந்திய வீரர் அரர்ஜீத்சிங் முதல் கோலை அடித்தார். அதன்பின்பு செளரப் ஆனந்த் 2வது கோலை அடிக்கவும், பாகிஸ்தான் 3வது கோலை அடித்தது. கடைசி நேரத்தில் இந்திய வீரர் மன்மீத் சிங் அபாரமாக ஆடி 3வது கோலை அடிக்க 3-3 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.





















