இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ரத்தம் சொட்ட சொட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீசியது கிரிக்கெட் வட்டாரத்தை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய இன்றைய போட்டியின் முதல் நாளில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கோலியைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தனர். டாப் ஆர்டர் சொதப்பவே, மிடில் ஆர்டர் களமிறங்கிய பேட்ஸ்மேன்களுக்கு ரன் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்த போட்டியில், புஜாரா வழக்கம் போல் 4 ரன்களுக்கு ஆண்டர்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் புஜாராவை அவுட் செய்ததன் மூலம் அவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11 முறை ஆண்டர்சென் அவுட் செய்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்த இன்னிங்ஸில், அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருக்கும் நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட அவர் பந்துவீசிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
போட்டியின் 42-வது ஓவரை ஆண்டர்சன் வீசியபோது, மேகரா அவரது கால்களை ஃபோக்கஸ் செய்தது. அப்போது அவர், கால் முட்டிப்பகுதியில் இருந்து ரத்தம் வருவது தெரிந்தது. ஃபீல்டிங்கின்போது அவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும், ஆண்டர்சன் பந்துவீச்சை தொடர்ந்து வருகிறார்.
இங்கிலாந்தின் மிக சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆண்டர்சன், இந்திய அணிக்கு எதிராக அதிரடியாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதுவரை, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 12 முறை சச்சின் டெண்டுல்கரையும், 11 முறை புஜாராவையும், 10 முறை ரஹானேவையும், 10 முறை கோலியையும், 10 முறை தோனியையும் அவுட் செய்து பெவிலியன் அனுப்பியுள்ளார் அவர்.
ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்தியா இதுவரை ஓவல் மைதானத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011, 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆடிய போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக, 2011 மற்றும் 2014ம் ஆண்டு போட்டிகளில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால், ஓவல் மைதானத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் இந்தியாவின் சோகத்திற்கு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.