லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வரை வெற்றி இங்கிலாந்தின் வசமே இருந்தது. ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய டெயிலண்டர்களான முகமது ஷமியும், பும்ராவும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், இங்கிலாந்து அணிக்கு ஆட்டம் முடிய இருந்த 60 ஓவர்களுக்கு 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய 52 ஓவர்களில் 120 ரன்களுக்கு சுருட்டி இந்தியா அபார வெற்றி பெற்றது. 2018ம் ஆண்டு இதே லார்ட்ஸ் மைதானத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது முதல் கோலி படை தனது தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.




89 ஆண்டுகாலமாக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிவரும் இந்திய அணி இதுவரை அங்கு 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1932ம் ஆண்டு முதன்முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் தோல்வி என்ற சோக வரலாற்றை தொடங்கிய இந்திய அணிக்கு, 54 ஆண்டுகளுக்கு பிறகு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணிதான் முதன்முதலில் வெற்றிக்கனியை பறித்து கொடுத்தது.


1986ம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் திலீப் வெங்கர்சகாரின் பேட்டிங், கபில்தேவின் ஆல்ரவுண்டர் திறமையால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் லார்ட்சில் ஒரு வெற்றியை பெறுவதற்கு இந்திய அணி 28 ஆண்டுகள் காத்திருந்தது.




2014ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரஹானே, ஜடேஜா, முரளி விஜய், இஷாந்த் சர்மா, புவனேஷ்குமார் விளங்கினார். அந்த வெற்றிக்கு பிறகு, சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது.




லார்ட்ஸ் மைதானத்தில் 1986ம் ஆண்டு வெற்றி பெற்ற கபில்தேவ், 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியிருந்தார். 2014ம் ஆண்டு லார்ட்சில் வெற்றியை பெற்றுத்தந்த தோனி, 2011ம் ஆண்டு உலககோப்பையை வென்றிருந்தார். இதனால், உலககோப்பையை வெல்லும் இந்திய கேப்டன் மட்டுமே லார்ட்ஸ் மைதானத்தில் வெல்வார்கள் என்ற நம்பிக்கையை கோலியின் அணியினர் தங்களது சிறப்பான ஆட்டத்தால் மாற்றியமைத்துள்ளனர். இதன்மூலம் கோலி தற்போது கபில்தேவ், தோனி வரிசையில் இணைந்துள்ளார். லார்ட்சில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.