இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை டாக்கா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வாய்ப்பு அமையும். 






ஜாம்பவான்களின் வரிசையில் அஷ்வின்: 


வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அனுபவ வீரர் ரவிசந்திரன் அஷ்வின் பல முக்கிய சாதனைகளை படைக்க இருக்கிறார். மேலும், கபில் தேவ் உள்ளிட்ட முக்கிய ஜாம்பவான்களின் பட்டியலிலும் இணைய இருக்கிறார். 


அஷ்வின் தற்போது 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2989 ரன்களை எடுத்துள்ளார். 3000 ரன்களை எடுக்க இன்னும் 11 ரன்கள்  தேவையாக உள்ளது. இதை நாளை நடைபெறும் டெஸ்ட் தொடரில் அஷ்வின் எடுத்துவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்களை எடுத்த ஜாம்பவான்களின் பட்டியலில் இணைவார். 


இதற்கு முன்னதாக முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ், ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே, நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹார்ட்லி, தென்னாப்பிரிக்கா வீரர் ஷான் பொல்லாக் பட்டியலில் அஷ்வின் இணைய இருக்கிறார். 



  • கபில்தேவ் - 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகள்

  • ஷான் பொல்லாக் - 3781 ரன்கள் மற்றும் 421 விக்கெட்டுகள்

  • ஸ்டூவர்ட் பிராட் - 3550 ரன்கள் மற்றும் 566 விக்கெட்டுகள்

  • ஷேன் வார்ன் - 3154 ரன்கள் மற்றும் 708 விக்கெட்டுகள்

  • சர் ரிச்சர்ட் ஹாட்லீ - 3124 ரன்கள் மற்றும் 431 விக்கெட்டுகள்

  • ரவிச்சந்திரன் அஸ்வின் - 2989 ரன்கள் மற்றும் 443 விக்கெட்டுகள்


450 விக்கெட்கள்:


அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை முடிக்க இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின்மூலம் 450 விக்கெட்டுகளை வீழ்த்தினால் குறைந்த டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், உலகளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அஷ்வின் பெறுவார். இப்போதைக்கு, முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே மார்ச் 2005 இல் தனது 93 வது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை எட்டியபோது இந்திய சாதனை படைத்துள்ளார்.


நியூசிலாந்துக்கு எதிராக 80 போட்டிகளில் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அஸ்வினைப் பொறுத்தவரை, அவர் 87 போட்டிகளில் 30 ஐந்து விக்கெட்டுகளுடன் 443 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.