இந்த வாரத்திற்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா கேப்டன் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுள்ளார். 773 புள்ளிகளுடன் ரோஹித் ஐந்தாவது இடத்திலும், 766 புள்ளிகளுடன் விராட் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
இதன் மூலம், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் டாப் ஐந்து இடங்களில் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேனானார் ரோஹித் ஷர்மா. அதுமட்டுமின்றி, தனது டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக டாப் 5 இடத்திற்கு ரோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 916 புள்ளிகளுடன் ஜோ ரூட் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் லபுசானே ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பெளலர்கள் தரவரிசையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 918 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய அணி வீரர்களைப் பொருத்தவரை, 839 புள்ளிகளுடன் ரவிசந்திரன் அஷ்வின் அதே இரண்டாவது இடத்திலும், 759 புள்ளிகளுடன் ஜஸ்ப்ரித் பும்ரா பத்தாவது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி டிராவாகவே, லார்ட்சில் இந்தியாவும், லீட்சில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதையடுத்து, தொடரின் முக்கியமான 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டது. இதில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்டேண்ட்-பை வீரராக பெயரிடப்பட்டிருந்த பிரசித், இப்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.