7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதனால், டி-20 உலககோப்பைக்கான அட்டவனை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தி காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்திருந்தது.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்க இருந்த டி-20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவுவதால், அதனை ஒட்டியுள்ள ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, மீண்டும் இந்தியாவுக்கு தொடர் மாற்றப்படலாம் என ரசிகர்கள் யூகித்து கமெண்ட் செய்து வந்தனர்.
ஆனால், சர்ப்ரைஸ் செய்தியை உடைத்த ஐசிசி, டி-20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுனை இன்று முதல் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, ஐசிசி டி-20 உலகக்கோப்பை காணொளி காட்சி வழியாக உலகைச் சுற்றி வர உள்ளது.
2016 டி-20 உலகக்கோப்பையின் நட்சத்திர வீரரான வெஸ்ட் இண்டீஸின் கார்லஸ் பிராத்வைட் இந்த டிராபி டூரை இன்று அறிமுகம் செய்ய உள்ளார். ஐசிசி டி-20 உலகக்கோப்பையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் டி-20 தொடர்பான சிறப்பான ஃபில்டர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை தொடர்பான அனைத்து தகவல்களும், அப்டேட்களும் #T20WorldCup என்ற ஹேஷ்டாக்கின் கீழ் பதியப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த ஹேஷ்டாக் பயன்படுத்தி ரசிகர்களும் கிரிக்கெட் அணிகளுக்கு தங்களது ஆதரவை அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. சர்வதேச துபாய் மைதானம், அபு தாபியில் உள்ள ஷேக் சையத் மைதானம், ஷார்ஜா மைதானம், ஓமன் கிரிக்கெட் அகாடெமி மைதானம் ஆகிய நான்கு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.