உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.12 கோடி பரிசுத் தொகைக்கான உலக டூர் இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது. சீனாவின் குவாங்சோவ் நகரில் தொடங்க இருந்த போட்டி கொரோனா பரவல் காரணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கவிருந்த இந்தப் போட்டி கொரோனா பரவல் காரணமாகவும், மைதானம் கிடைப்பதில் சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள நிமிபுத்ர் அரங்கில் டிசம்பர் 7 முதல் 11 வரை நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. 






இதுகுறித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ தற்போதைய கொரோனா பரவல் காரணமாக சீன பேட்மிண்டன் அசோசியேஷன் (சிபிஏ) உடன் கலந்தாலோசித்து, பல்வேறு சவால்களால் உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி 2022 ஐ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி 2022க்கு தொடங்குவதற்கு முன்பாக இதுபோன்ற கடைசிக்கட்ட அறிவிப்பில் மாற்று இடத்தை வழங்கிய தாய்லாந்தின் பேட்மிண்டன் சங்கத்திற்கும் BWF நன்றி தெரிவிக்க விரும்புகிறது.” என தெரிவித்திருந்தது.


நடப்பு ஆஸ்திரேலியன் ஓபன் முடிந்த பிறகு வருகின்ற நவம்பர் 22 ம் தேதி இந்த தொடருக்கு தகுதி பெற்ற விளையாட்டு வீரர்களின் பட்டியலை உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிடும். உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டியில் இந்திய நாட்டிலிருந்து எச்.எஸ்.பிரணாய் மட்டும் பங்கேற்க இருக்கிறார். இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், உலகின் 5-ம் நிலை வீராங்கனையுமான பி.வி. சிந்து இந்த தொடரில் இருந்து விலகினார்.






முன்னதாக இதுகுறித்து பி.வி.சிந்துவின் தந்தை பி.வி.ரமணா தெரிவித்ததாவது, புதிய சீசனை தொடங்குவதற்கு முன்பாக சிந்துவை காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் பி.வி.சிந்து  உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே பயிற்சியை தொடங்கிவிட்ட சிந்து ஜனவரி மாதம் முதல் நடக்கும் போட்டிகளுக்கு முழு உடல்தகுதியுடன் இருப்பார்' என்று தெரிவித்தார்.