Common Wealth 2026: 2026 காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. பேட்மிண்டன் மற்றும் ஸ்குவாஷ் போன்ற போட்டிகளும் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இந்திய வீரர்களுக்கு பதக்க வாய்ப்புகள் உள்ள விளையாட்டுகள் நீக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காமன்வெல்த் போட்டி 2026:


ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் நகரில் வரும் 2026ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விளையாட்டு உலகின் முக்கிய நிகழ்வானது, அந்த ஆண்டில் ஜுலை 23ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 2ம் தேதி வரை  என 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், பலரும் அறிந்த ஏராளமான விளையாட்டுகள் நீக்கப்பட்டு, வெறும் 10 போட்டிகளை மட்டுமே உள்ளடக்கி காமன் வெல்த் 2026 எடிஷன் நடைபெறும் என ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.


நீக்கப்பட்ட விளையாட்டுகள்:


கிரிக்கெட், பேட்மிண்டன், ஹாக்கி, மல்யுத்தம், டைவிங், பீச் வாலிபால், சாலை சைக்கிள் ஓட்டுதல், மலை பைக்கிங், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரக்பி செவன்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பாரா டேபிள் டென்னிஸ், டிரையத்லான் மற்றும் பாரா டிரையத்லான், ஷூட்டிங், இவை அனைத்தும் 2022 பர்மிங்காம் கேம்ஸின் ஒரு பகுதியாக இருந்தன. ஆனால், இவை அனைத்தும் 2026ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 


10 விளையாட்டுகளின் விவரங்கள்:


2026 ஆம் ஆண்டில், கிளாஸ்கோவில் நடைபெற உள்ள கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தடகளம் மற்றும் பாரா தடகளம், நீச்சல் மற்றும் பாரா நீச்சல், ஆர்ட் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பாரா டிராக் சைக்கிள் ஓட்டுதல், நெட்பால், பளு தூக்குதல் மற்றும் பாரா பவர் லிஃப்டிங், குத்துச்சண்டை, ஜூடோ, லான் பவுல்ஸ் மற்றும் பாரா பவுல்ஸ், 3x3 கூடைப்பந்து மற்றும் 3x3 வீல்சாக் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற உள்ளன.


இந்தியாவிற்கு பின்னடைவு:


காமன்வெல்த் போட்டி நடைபெறும் இரண்டு வார இடைவெளியில், அதாவது ஆகஸ்ட் 15 முதல் 30 வரை ஹாக்கி உலகக் கோப்பை போட்டி வாவ்ரே, பெல்ஜியம், ஆம்ஸ்டெல்வீன் மற்றும் நெதர்லாந்து ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வீரர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக ஹாக்கி போட்டி சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை, காமன்வெல்த் போட்டிகளில் வென்றுள்ளது. மகளிர் அணியும் 2000 எடிஷனில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போட்டிகளிலும் இந்தியா கடந்த காலங்களில் பதக்கங்களை வென்றுள்ளது. அந்த போட்டிகளும் கைவிடப்பட்டு இருப்பது, காமன்வெல்த் 2026 எடிஷனில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.