15வது ஆக்கி உலக கோப்பை திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வரில் நேற்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி, 13) தொடங்கி ஜனவரி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி டி பிரிவில் இடம் பெற்றுள்ளது.


ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் 2வது சுற்றில் சந்திக்கும், அதில் இருந்து மேலும் 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.


நீல புல்தரையில் நடைபெறும் இப்போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த புல்தரை முறை முதன்முதலில் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீல தரையானது ஹாக்கியின் மிக உயர்ந்த மட்டங்களில் அதாவது சர்வதேச அளவில் விளையாடும் மேற்பரப்பாக மாறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஸ்போர்ட்டிங் மேற்பரப்புகள் எனப்படும் இந்த நீல மேற்பரப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு என ஒரு  நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன,  மேலும், இந்த நீல மேற்பரப்புகள் விளையாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அப்படியென்றால், ஹாக்கி போட்டிகள் ஏன் நீலப் புல்வெளியில் விளையாடப்படுகின்றன? அதை சற்று விரிவாகப் பார்ப்போம்.


ஹாக்கியில் "வாவ்" காரணியைச் சேர்த்தல்


2012 இல், லண்டன் ஒலிம்பிக்கில் ஒளிரும் மஞ்சள் பந்தைக் கொண்ட நீல நிற புல்வெளி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் நோக்கம், விளையாட்டில் மிகவும் தனித்துவமான விளையாட்டு பரப்புகளில் ஒன்றான ஃபீல்ட் ஹாக்கியை வழங்குவதன் மூலம் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாற்காக அமெரிக்காவின் இடாஹோவில் உள்ள போயஸ் ஸ்டேட் கால்பந்து மைதானத்தால் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது  பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானது. ’டை-ஹார்ட்’ ஹாக்கி ரசிகர்களை எரிச்சலூட்டும் அதே வேளையில், இது புதிய பார்வையாளர்களை ஈர்த்தது.


இருப்பினும், நீல நிற புற்தரை இன்று வீரர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. "இது ஒரு 'வாவ்' காரணியைக் கொண்டுள்ளது," என்று இங்கிலாந்து அணியின்  டிஃபென்டர் ஹாரி வீர் 2016 -ல் டெய்லி எக்ஸ்பிரஸ் எனும் செய்தி நிறுவனத்திடம் கூறினார். 


ஹாக்கியை அதிக ஒளிபரப்புக்கு ஏற்றதாக மாற்றுதல்


இந்த நடவடிக்கைக்குப் பின்னால் மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. ஹாக்கி என்பது ஒப்பீட்டளவில் சிறிய பந்தைக் கொண்டு (தோராயமாக ஒரு கிரிக்கெட் பந்தின் அளவு) விளையாடப்படும் மிக வேகமான விளையாட்டு. மஞ்சள் பந்திற்கு எதிராக நீல நிற புல்தரை ஒரு சிறந்த மாறுபாட்டை வழங்குகிறது. இது வீரர்களுக்கு பந்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஒளிபரப்பாளர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பந்து கோர்ட்டைச் சுற்றி குதிக்கும்போது, ​​பந்தின் ஆழமான நீலத்திற்கும் பந்தின் மஞ்சள் நிறத்திற்கும் இடையிலான வேறுபாடு, இதற்கு முன்னர் இருந்த பச்சை மேற்பரப்பு மற்றும் வெள்ளை பந்துடன் ஒப்பிடும்போது விளையாட்டைப் பின்பற்றுவதைவிட எளிதாக்கியது.


ஹாக்கி போட்டிக்கென பார்வையாளர்களின் ஆர்வத்தை வளர்க்க ஹாக்கி போராடியதால் இது மிகவும் முக்கியமானது. ஒலிம்பிக் மற்றும் மெகா நிகழ்வுகள் அதிக பார்வையாளர்களைப் பெற்றாலும், கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்றவற்றுடன் போட்டியிடுவதற்கு ஹாக்கி விளையாட்டு இன்னும்  போராடிக்கொண்டு வருகிறது. ஹாக்கியின் போராட்டங்களைப் பற்றிய ஒரு கோட்பாடு என்னவென்றால், விளையாட்டு "டிவிக்கு ஏற்றதாக" இல்லை, அதாவது தொலைக்காட்சிகளில் கண்டு களிக்கும அளவிற்கு இல்லை. இதை சரி செய்யும் வகையில், ஆடுகளத்தின் நிறத்தை மாற்றுவது, மஞ்சள் பந்தைப் பயன்படுத்துவது போன்ற புதுமைகள் ஹாக்கியில் அறிமுகப்படுத்தப்பட்டன.


லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னதாக, சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) CEO Kelly Fairweather, நீல ஆடுகளத்தைப் பற்றி பேசுகையில், "ஹாக்கியின் விளக்கக்காட்சியை புதுமைப்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம், புற்தரையை மற்றவற்றுடன், ஆடுகளத்தில் உள்ள பார்வையாளர்கள் மற்றும் தொலைக்காட்சியில்  போட்டியை கண்டுகளிக்கும் ரசிகர்களுக்காகவும் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.