15ஆவது ஹாக்கி உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டி:
தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்தநிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி மற்றும் ஜெர்மனி அணிக்கு நேருக்குநேர் மோதுகின்றன. இதில், வெல்லும் அணி உலகக் கோப்பையை வென்று முத்தமிடும்.
பெல்ஜியம் இறுதிப்போட்டிக்கு வந்த பாதை:
பெல்ஜியம் தனது லீக் போட்டிகளில் ஜப்பான், தென்னாப்பிரிக்காவை வென்று ஜெர்மனிக்கு எதிரான போட்டியை டிரா ஆனது. தொடர்ந்து அதிக கோல் அடித்ததன் அடிப்படையில் ’பி’ பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதியில் நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி தொடர்ந்து அரையிறுதியில் நெதர்லாந்தை 3-2 என்ற கணக்கில் பெனால்டி ஷுட் அவுட் முறையில் வென்று 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
ஜெர்மனி இறுதிப்போட்டிக்கு கடந்து வந்த பாதை:
’பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த ஜெர்மனி அணியும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஜப்பான், தென்னாப்பிரிக்காவை வென்று பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியை டிரா செய்தது. இருப்பினும் ஜெர்மனி அணி கோல் அடிப்படையில் பெல்ஜியத்தை விட பின் தங்கி 2வது சுற்றில் பிரான்சை சந்தித்தது.
அந்த போட்டியில் 5-1 என்ற கணக்கில் வென்ற ஜெர்மனி அணி, கால் இறுதியில் 4-3 என்ற பெனால்டி ஷுட் அவுட்டில் இங்கிலாந்தையும், அரையிறுதியில் உலகின் 1 அணியான ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்து 5வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஹெட் டூ ஹெட்:
சர்வதேச அளவில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் பெல்ஜியம் 15 முறையும், ஜெர்மனி 13 முறையும் வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் மோதுகின்றன.
சவால் நிறைந்தது:
இந்த போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என்று ஜெர்மனி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரே ஹென்னிங் தெரிவித்துள்ளார். அதில், ” அர்ஜென்டினாவில் நடந்த ப்ரோ லீக்கில் நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றோம். இந்த உலகக் கோப்பை தொடரிலும் நாங்கள் மோதிய போட்டி டிரா ஆனது. கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் சாதித்ததை வைத்து பெல்ஜியம் அணி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. எனவே, இது ஒரு கடினமான போட்டியாக இருக்கும், நாங்கள் அவர்களுக்கு சவால் விட வேண்டும். அவர்களின் வீரர்கள் அனைவரும் உலகத் தரம் வாய்ந்தவர்கள்.
அவர்களை விட நாங்கள் இன்னும் மிகவும் வலிமையானவர்கள். அவர்களுக்கு சவால் விட விரும்புகிறோம். எவ்வளவு காலம்தான் அவர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள், நாங்கள் இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்துவோம்" என்று தெரிவித்தார்.