இந்தியாவில் நடக்கும் சாதி, மத வேறுபாடும் வெறியும் இருப்பது போல உலகம் முழுவதும் ஒரு காலத்தில் நிறவெறி தலைவிரித்தாடியது. இதன் கோரத்திற்கு பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். விளையாட்டிலும் நிற வெறியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.
தந்தைக்காக வருந்திய மகன்:
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மகாயா நிட்னி ஒரு முறை, அணியில் தான் எதிர்கொண்ட நிறவெறி தாக்கம் குறித்து மனம் திறந்து பேசினார். அது அப்போது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில், தற்போது மகாயா நிட்னியின் மகன் தனது தந்தை அணியில் எதிர்கொண்ட நிறவெறி குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மகாயா நிட்னியின் மகன் தாண்டோ கூறியதாவது, “அங்கு அவர் தினமும் தனது வாழ்விற்காக போராடிக் கொண்டிருந்தார். அவர் அங்குள்ள ஒரே கருப்பு நிற நபராக இருந்ததால், எத்தனை முறை அவர் இரவு உணவுக்கு அழைக்கப்பட்டார் என கேட்பதே அருவருப்பாக உள்ளது”
இவ்வாறு அவர் கூறினார்.
மகாயா நிட்னி:
மகாயா நிட்னியின் மகனான தாண்டோ 21 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். தானும் நிற பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியிருப்பதும் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
47 வயதான மகாயா நிட்னி தென்னாப்பிரிக்க அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளையும், ஒரு டெஸ்டில் அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 173 ஒருநாள் போட்டிகளில் ஆடி 266 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட கூட மாட்டார்கள்:
மகாயா நிட்னி தான் எதிர்கொண்ட இன பாகுபாடு குறித்து அப்போது அவர் கூறியதாவது, “ நான் எப்போதும் அந்த நேரத்தில் தனிமையிலே இருப்பேன். இரவு உணவுக்கு என்னை யாருமே அழைக்கமாட்டார்கள். அணியின் சக வீரர்கள் என் முன்பு அனைத்து திட்டத்தையும் வகுப்பார்கள், ஆனால் என்னை மட்டும் தவிர்த்துவிடுவார்கள். காலை உணவு சாப்பிடச் சென்றால் யாரும் என் பக்கத்தில் உட்காரமாட்டார்கள். கிரிக்கெட் போட்டியின்போது எனது பேக்கை அணியின் பேருந்து ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு, நான் பின்னாலே மைதானத்திற்கு ஓடுவேன்” என்று அவர் கூறியிருந்தார்.
மகாயா நிட்னி தான் எதிர்கொண்ட இன பாகுபாடு குறித்து மனம் திறந்து பேசியிருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியது. மகாயா நிட்னியை இவ்வாறு நடத்தியதற்கு ரசிகர்கள் பலரும் தென்னாப்பிரிக்காவின் சக கிரிக்கெட் வீரர்களையும், அணி நிர்வாகத்தையும் சரமாரியாக விமர்சித்தனர்.
இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்த பிறகு அந்த அணிக்கு தெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது தெம்பா பவுமா, லுங்கி நிகிடி, ரபாடா போன்ற கருப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியில் ஆடி வருகின்றனர். தென்னாப்பிரிக்க அணிக்காக ஆடிய முதல் கருப்பின வீரர் மகாயா நிட்னி என்பது குறிப்பிடத்தக்கது.