சீனாவில் நடைபெற்ற முதல் ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் தீபிகா பல்லிகல் - ஹரிந்தர்பால் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.


இறுதிப்போட்டி:


ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்னோட்டமாக, முதன்முறையாக ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில், தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இவான் யுவன் மற்றும் ரேச்சல் அர்னால்ட் ஜோடியை, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர்பால் ஜோடி எதிர்கொண்டது.


சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்:


2022ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கு பிறகு முதன்முறையாக, 31வயதான தீபிகா பல்லிகல் இந்த போட்டியில் களமிறங்கினார். ஆசியகோப்பை போட்டிகளுக்கு முன்னோட்டமாக இந்த போட்டியில் அவர் விளையாடினார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர்பால் ஜோடி 2-0 என்ற கணக்கில் வென்று சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது.






 


அரையிறுதியில் நடந்தது என்ன?


முன்னதாக வியாழனன்று நடந்த அரையிறுதியில் இந்திய ஜோடி 2-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவின் சியாபிக் கமால் மற்றும் ஐஃபா அஸ்மான் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு இந்திய ஜோடியான அனாஹத் சிங் மற்றும் அபய் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. தங்கப்பதக்கம் வென்ற தீபிகா பல்லிகல் இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இணையாக களமிறங்கிய ஹரிந்தர்பால்சிங் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஆசிய விளையாட்டு போட்டி:


இந்த ஆண்டு செப்டம்பரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த சீனா தயாராகி வரும் நிலையில், கலப்பு இரட்டையர் போட்டி ஹாங்சோவ் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சோதனை நிகழ்வாக நடத்தப்படுகிறது. சீனா, ஹாங்காங், இந்தியா மற்றும் மலேசியா உட்பட 10 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 42 விளையாட்டு வீரர்களைக் கொண்ட 21 அணிகளுடன் ஜூன் 26 அன்று இந்த போட்டி தொடங்கியது.


ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஸ்குவாஷில் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டம் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவதை இந்தப் போட்டி குறிக்கிறது. சீனாவும் முதன்முறையாக ஆசிய அளவிலான ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டியை நடத்துகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.