Grand Master Gukesh: செஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற சாதனையை, தமிழக வீரர் குகேஷ் படைத்துள்ளார்.


பட்டம் வென்று சாதித்த குகேஷ்:


கனடாவின் டொரொண்டோவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் டோர்ன்மெண்ட்ல், தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது வீரரான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து இந்த பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் குகேஷ் தனதாக்கியுள்ளார். இதனிடையே, கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இளம் வயது வீரர் மற்றும் இந்த சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனைகளையும் குகேஷ் படைத்து செஸ் வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.


 யார் இந்த குகேஷ்?


கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி , சென்னையை சேர்ந்த தெலுங்கு பேசும் குடும்பத்தில் குகேஷ் பிறந்தார். அவரது தந்தை ரஜினிகாந்த் ஒரு மருத்துவராவார். தாயார் பத்மா மைக்ரோபயாலாஜிஸ்ட் ஆவார். 7 வயது முதல் அவர் செஸ் விளையாடி வருகிறார். வழக்கமாக செஸ் வீரர்கள் தங்களது விளையாட்டை மேம்படுத்திக்கொள்ள, செஸ் இன்ஜின் உடன் விளையாடி திறமையை ஊக்குவித்துக் கொள்வார்கள். ஆனால், குகேஷ் 2500 புள்ளிகளை பெறும் வரையில், செஸ் இன்ஜின் அதரவுடன் கூடிய பயிற்சிகளையே மேற்கொள்ளவில்லை. பயிற்சியாளரின் ஆலோசனைப்படி நேரடி போட்டிகள் மூலமே அதிக பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். 


இளம் வயது சாதனைகள்:


கடந்த 2015ம் ஆண்டு 9 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான, ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ் வென்றார். தொடர்ந்து, 2018ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்ட உலக இளம் விரர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார். பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை குவித்த அவர், மார்ச் 2018-இல் 34 வது Cappelle-la-Grande Open இல் சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான புள்ளிகளை பெற்றார்.


கிராண்ட் மாஸ்டர் ஆன குகேஷ்:


12 வயது ஏழு மாதங்கள் 17 நாட்களில் இந்தியாவின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். அதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை  வெறும் 17 நாட்களில் அவர் தவறவிட்டார். செஸ் ஒலிம்பியாடில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2700-க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றார். இதன் மூலம், செஸ் உலகில் இளம் வயதில் 2700 புள்ளிகளை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை குகேஸ் பெற்றார். அதோடு, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனயை, 2022ல் குகேஷ் படைத்தார். 


ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வகித்து வந்த நாட்டின் முதல் நிலை விரர் என்ற பட்டத்தை, 36 ஆண்டுகளுக்குப் பிறகு பறித்து குகேஷ் சரித்திரம் படைத்தார்.  இதைதொடர்ந்து, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும், குகேஷ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.