இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று கொடுத்தவர். உலகின் தலைசிறந்த கேப்டன்களின் பட்டியலில் தோனி என்ற பெயர் தவிர்க்கவே முடியாத பெயர் ஆகும்.
தோனி ஓய்வை அறிவித்த நாள் இன்று:
இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற தோனி, 2020ம் ஆண்டு இதே சுதந்திர தினத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார்.
தோனியின் வருகைக்கு பிறகு இந்திய அணி புதிய வளர்ச்சியையும், உச்சத்தையும் பெற்றது. தோனியின் கேப்டன்சி காலத்தில் தோனி ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித்சர்மாவையும் பட்டை தீட்டி உருவாக்கினார். ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கியது, விராட் கோலியை ஒன் டவுன் வீரராக தொடர்ச்சியாக ஆட வைத்தது, ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வினை உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக மாற்றியதும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை அணியில் அறிமுகப்படுத்தியதும் என்று தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி ஒவ்வொரு கட்டத்திலும் பட்டை தீட்டப்பட்டது.
கேப்டன்களின் கேப்டன்:
அதேபோல, தனக்கு பிறகு அணியை வழிநடத்த கோலியையும் உருவாக்கி மிகச்சரியான நேரத்தில் அவரிடம் அணியை ஒப்படைத்தார். தோனியின் கேப்டன்சி என்பது வெற்றிகளுக்காக மட்டும் கொண்டாடப்படுவது அல்ல. வெற்றியை பெறுவதற்காக அவர் எடுக்கும் அசாத்தியமான மற்றும் அசாதாரணமான முடிவுகளும் எடுப்பதே காரணம் ஆகும்.
உதாரணத்திற்கு, டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அனுபவ வீரர் ஹர்பஜன்சிங் இருந்தபோது ஜோகிந்தர்சர்மாவிடம் கடைசி ஓவரை கொடுத்து அணியை வெற்றி பெற வைப்பார். இதுபோன்று பல நெருக்கடியான சூழலை தோனி வெற்றி பெற வைத்ததை கூறலாம். தோனியை கேப்டன்களின் கேப்டன் என்றும் கூறலாம். தோனியின் கேப்டன்சியில் ஆடிய கோலி, ரோகித்சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, ஜடேஜா, ரஹானே, கே.எல்.ராகுல், ஷிகர் தவான் என பலரும் கேப்டன்களாக இந்திய அணிக்கு செயல்பட்டுள்ளனர்.
வெற்றி நாயகன்:
கங்குலியால் அணிக்குள் கொண்டு வரப்பட்ட தோனி, சச்சின், சேவாக், யுவராஜ் ஆகியோரின் துணையுடன் இந்திய அணியை பல முறை வெற்றி பெற வைத்தார். ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கேப்டன், டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற கேப்டன், 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றவர் என இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்த ராஞ்சியைச் சேர்ந்த தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 17 ஆயிரத்து 266 ரன்களை எடுத்துள்ளார்.
43 வயதான தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 இரட்டை சதம், 6 சதங்கள், 33 அரைசதங்கள் என 4 ஆயிரத்து 876 ரன்களும், 350 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10 சதங்கள், 73 அரைசதங்கள் என 10 ஆயிரத்த 773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 1617 ரன்களும், 264 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 24 அரைசதங்களுடன் 5 ஆயிரத்து 243 ரன்களும் எடுத்துள்ளார்.
தோனியின் நெருங்கிய நண்பராக உலா வந்த சுரேஷ் ரெய்னா, தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அதே 2020ம் ஆண்டு சுதந்திர தினத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.