நடந்து முடிந்த ஐபிஎல் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டார். இவரது அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்று சொன்னாலும் மிகை ஆகாது. எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்று வெளியேறியது. இதையடுத்து, தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 


ஐபிஎல் ஓய்வுக்கு பிறகு, தினேஷ் கார்த்திக் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுடன் இருந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர்பான நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தினேஷ் கார்த்தில் நியமிக்கப்பட்டார். இதற்காக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விளையாட்டு வீரர்களின் பயிற்சியில் பங்கேற்றார் தினேஷ் கார்த்திக். அப்போதுதான், தினேஷ் கார்த்திக் நீரஜ் சோப்ராவை சந்தித்து பேசினார். மேலும், நீரஜ் சோப்ராவின் ஈட்டி ஒன்றையும் வாங்கி தினேஷ் கார்த்திக் நீண்டதூரம் எறிந்தார். ஆனால், மார்க் இல்லாததால் தினேஷ் கார்த்திக் எவ்வளவு தூரம் ஈட்டி எறிந்தார் என்பது தெரியவில்லை. 


கெட் செட் கோல்ட்: 


தினேஷ் கார்த்திக் ஒலிம்பிக்கின்போது ‘கெட் செட் கோல்ட்’ என்ற நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சியில் நடத்த இருக்கிறார். அதில், பாரீஸில் விரைவில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்க வெல்ல வாய்ப்புள்ள இந்திய விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளில் தினேஷ் கார்த்திக் பார்வையிட்டு, அதை பற்றி கேட்டறிகிறார். 


அதில், தினேஷ் கார்த்திக் கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடம் பேசினார். இவரை தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் அடுத்ததாக குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீன், ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ், பாட்மிண்டன் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சாத்விக்சாய்ராஜ் ரோங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் 'கெட் செட் கோல்டு' நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். 


'கெட் செட் கோல்ட்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “அனைத்து சிறந்த விளையாட்டு வீரர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். இது மிகவும் உற்சாகமான அனுபவமான இருக்கும். உலகின் ஒலிம்பிக் போட்டி போன்ற மிக உயர்ந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு அவர்கள் வெற்றிபெற என்ன வகையான தியாகங்கள் என்பதை அறிய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம், எங்களது ஒலிம்பிக் வீரர்களின் ஒழுக்கம், கவனம், கடின உழைப்பு, அவர்களின் கனவுகளை அடைவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றை மக்களும் அறிந்துகொள்வார்கள்” என தெரிவித்தார். 


ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக்கின் செயல்திறன்: 


நடந்து முடிந்த ஐபிஎல் 2024ல் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் சிறப்பானதாகவே இருந்தது. இந்த சீசனில் தினேஷ் கார்த்திக், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்கள் உள்பட 326 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கார்த்திக் அடித்த 83 ரன்கள்தான் சிறந்த ஸ்கோராக இருந்தது. தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் மொத்தமாக 257 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவர் 22 அரைசதங்கள் உள்பட 3577 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கார்த்திக் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும், ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் 466 பவுண்டரிகள், 161 சிக்சர்கள் அடித்துள்ளார்.