இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நிக் காம்ப்டன் தற்போது நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் நான்கு மேட்ச்கள் நடைபெற்ற பிறகும், இந்திய வீரரான ரவிச்சந்திர அஷ்வின் அணியில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் வரிசையில் தற்போதைய டெஸ்ட் சீரிஸ் அணியில் ரவிந்திர ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி பௌலராக இருப்பினும், அஷ்வின் அணியில் இடம்பெறாதது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிக் காம்ப்டன், அஷ்வின் இந்திய அணியில் இடம்பெறாததற்கு அவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரமே காரணம் எனவும் கூறியுள்ளார். “எப்படி அஷ்வினுடன் கோஹ்லிக்கு இருக்கும் தனிப்பட்ட பிரச்னை தற்போது அணியில் இடம்பெறும் ஒன்றாக மாறியது என யாராவது எனக்கு விளக்க முடியுமா? #India" என்று நிக் காம்ப்டன் பதிவிட்டுள்ளார்.







அஷ்வின்


 


உலக டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களுள் முன்னனியில் இருந்தவர் அஷ்வின். கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் எடுத்த விக்கெட்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்தினார் அஷ்வின். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், அஷ்வின் நூறு ரன்களைக் கடந்திருந்தார். 


லீட்ஸின் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 5 மேட்ச்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் சீரிஸில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு சரி சமமாக விளையாடி வருகிறது. அதனால், இந்திய அணி இதில் வெற்றி பெற அணிக்குள் சில மாற்றங்களைச் செய்து, அஷ்வின் தன் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



ஜடேஜா


 


முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா ஆகியோருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், ரவிந்திர ஜடேஜா மட்டுமே இந்தியாவின் ஸ்பின் பௌலராகக் களம் இறங்கவுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா சில ரன்களை எடுத்து அணிக்கு உதவியிருந்தாலும், அவரால் அதிக விக்கெட்களை அந்தப் போட்டிகளில் வீழ்த்த முடியவில்லை. 


லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், ஜடேஜா ஐந்தாவது ஆளாக பேட்டிங்கிற்கு அனுப்பப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனினும் இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒல்லீ ராபின்சனால் அவுட் செய்யப்பட்டார் ஜடேஜா.