ஃபிஃபா உலக்க்கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்திலேயே அர்ஜென்டினா அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்து உலகம் முழுவதும் உள்ள கால் பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 36 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த அர்ஜென்டினா அணி ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியிலேயே சவுதி அரேபிய அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
லியோனல் மெஸ்ஸி கோல் அடித்த கோலுடன் 1 -0 என்ற கணக்கில் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது. ஆனால் ஆட்டத்தின் 48, 54ஆவது நிமிடங்களில் சவுதி அரேபிய அணியின் அல்ஷெரி, அல்டவ் சராய் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து அதிரடியாய் கோல் அடித்து சவுதி அரேபிய அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர்.
கடைசி நிமிடம் வரை தொடர்ந்து முயன்றும் ஸ்கோரை சமன் செய்ய முடியாமலும், நட்சத்திரக் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி அடித்த கோல் விழலுக்கு இறைத்த நீராக மாறியும் அர்ஜென்டினா அணி இன்றைய போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், 1990இல் கேமரூன் அணி பெற்ற வெற்றிக்குப் பிறகு உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஐரோப்பாவைச் சேராத முதல் அணி என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது.
இந்நிலையில் மெஸ்ஸியின் இன்றைய ஆட்டத்தை சொர்க்கத்திலிருந்து பார்த்து அர்ஜெண்டினாவின் மறைந்த நட்சத்திரக் கால்பந்து வீரர் மரடோனா திட்டிக் கொண்டிருக்கிறார் எனக்கூறி இணையத்தில் மீம்ஸ் பகிர்ந்து நெட்டிசன்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அர்ஜெண்டினா அணியின் வரலாற்றுத் தோல்வி குறித்த மீம்கள் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகின்றன.