உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் நடைபெற்று வருகிறது. பிரேசில், அர்ஜெண்டினா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் என்று கால்பந்து ஜாம்பவான்கள் அனைவரும் கத்தாரில் முகாமிட்டு உள்ளனர். இந்த நிலையில், 5 குழந்தைகளின் தாய் ஒருவர் கேரளாவில் இருந்து உலகக்கோப்பையை காண்பதற்காக தனது கார் மூலமாகவே சாலை மார்க்கமாகவே கத்தார் நோக்கி பயணத்தை மேற்கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


5 குழந்தைகளின் தாய்:


நாஜி நௌஷி என்ற 33 வயதான அந்த பெண் இந்த சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். நாஜி நௌஷி தனது கணவர் நௌஷத்துடன் சேர்ந்து ஓமனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 14, 12, 6, 4 மற்றும் 2 வயதில் 5 குழந்தைகள் உள்ளனர். வீட்டிலே ஒரு சராசரி தாயாக தனது வாழ்க்கையை செலவிட விரும்பாத நாஜி, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பியுள்ளார்.





இதற்காக, யூ டியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதன்மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். கால்பந்து ஜாம்பவனாகிய மெஸ்ஸியின் தீவிர ரசிகனான நாஜி, கத்தார் உலகக்கோப்பைக்கு நேரில் சென்று மெஸ்ஸியை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதையே ஒரு சாகச பயணமாக மேற்கொள்ள திட்டமிட்ட நாஜி, கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி தன்னுடைய சொகுசு கார் மூலம் கேரளாவின் கண்ணூரில் இருந்து கத்தார் நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


அபுதாபியில் நாஜி:


நாஜி வரும் டிசம்பர் மாதம் 10-ந் தேதி கத்தார் சென்றடைய திட்டமிட்டுள்ளார். அதாவது, உலகக்கோப்பை தொடர் நிறைவடைய 8 நாட்களுக்கு முன்புதான் அவர் கத்தார் சென்றடைய உள்ளார். இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டுள்ள கேரளா, கர்நாடகா, புனே வழியாக மும்பை சென்றார். அங்கிருந்து கப்பல் மூலமாக ஓமன் சென்றார். தற்போது அபுதாபியில் உள்ள அவர் பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா வழியாக கத்தார் சென்றடைய உள்ளார்.




மெஸ்ஸியின் தீவிர ரசிகையான அவர் கூறும்போது, “மெஸ்ஸி தன்னைத் தானே உருவாக்கியவர். பல வழிகளிலும் முன்னுதாரணமாக உள்ளார். இந்த உலகக்கோப்பை மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை ஆகும். இதனால், ஒட்டுமொத்த உலகத்துடன் நான் அதை கொண்டாட போகிறேன். அர்ஜெண்டினாவை உற்சாகப்படுத்த செல்கிறேன்.


சாகச பயணம்:


நான் கேரளாவின் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னுடைய குடும்பத்தால் விடுமுறைக்கு செல்ல, சுற்றுலா செல்ல போதுமான பணம் அப்போது தர இயலவில்லை. என்னைப் போன்ற குடும்ப தலைவிகளுக்கு பெருமைப்படும் விதமாக எந்தவொரு சாதனைகளும் இருப்பது இல்லை. நான் அதை மாற்றப் போகிறேன்.” என்றும் கூறினார்.


நாஜி தனி ஆளாக பயணிப்பது இது முதன்முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 17 மாநிலங்களையும் தனது காரில் சுற்றி வந்தார். தொடக்கத்தில் இவரது பயணத்திற்கு இவரது கணவர் நிதி உதவி அளித்து வந்த நிலையில், தற்போது இவரது பயணத்திற்கு தேவையான பணம் இவரது யூ டியூப் வருமானம் மூலமாகவே கிடைப்பதாகவும் கூறியுள்ளார். இவர் சாகச பயணங்கள் செல்லும்போது இவரது குழந்தைகளை இவரது தாயார் பராமரித்துக் கொள்கிறார்.


19 வயதிலே திருமணம் நடைபெற்றாலும், 5 குழந்தைகளுக்கு தாயானாலும் உலகை உலா வரும் கனவை நோக்கி செல்லும் நாஜியை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.