FIFA WORLDCUP 2022: 2022ஆம் ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவுக்கு உலகம் முழுவதும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய 22வது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நேற்று கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிறைவு பெற்றது.  இதில் நடப்புச் சாம்பியனாக இருந்த பலமான பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் வென்றது. அதற்கு முன்னதாக போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில், இருந்தது, இதன் பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரம் 30 நிமிடத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 


உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு உலகம் முழுவதும் உள்ள பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறனர். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


பிரதமர் மோடி வாழ்த்து:


பிரதமர் மோடி தனது வாழ்த்தில், "இது மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும்! FIFAWorldCup சாம்பியன் ஆனதற்கு அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!” இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 






முதலமைச்சர் வாழ்த்து:


அதேபோல், தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய வாழ்த்தில், "இது மிகவும் அற்புதமான போட்டி, பிரான்ஸ் அணியின் எம்பாப்வேயின் ஹாட்ரிக் கோலால் இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி எப்போதும் சிறப்புடன் நினைவுகூரப்படும். மேலும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் கோல் கீப்பர் மார்டினஸ்க்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். 






அதேபோல், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், “மெஸ்ஸிக்காக இதைச் செய்த அர்ஜெண்டினாவுக்கு வாழ்த்துகள், கோல் கீப்பர் மார்டினஸ்க்கு சிறப்பு வாழ்த்துகள். தன்னுடைய அற்புதமான சேமிப்பால், அணியின் வெற்றிக்கு வழிகோலிட்டுள்ளார். ஆரம்பம் முதலே அர்ஜெண்டினா வெல்லும் என்பதற்கான அறிகுறி இருந்தது குறிப்பிடத்தக்கது” என அவர் கூறியுள்ளார்.