FIFA World Cup: 1950ல் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கு தகுதி பெற்றும் இந்திய அணி கலந்து கொள்ள முடியவில்லை. காரணமாக என்ன இருக்கும் என இங்கு காணலாம். 


இந்தியாவில் இன்று வரை உள்ள ஒரு வழக்கம் வீட்டிற்குள் காலணி அணிந்து செல்லாமல் இருப்பது. தங்கள் வீடோ உறவினர்கள் வீடோ யார் வீட்டிற்குச் சென்றாலும், காலணிகளை வீட்டிற்கு வெளியே விட்டுச் செல்வது தான் இங்கு வழக்கமாக உள்ளது. ஆனால் விளையாட்டு மைதானத்துக்கு அப்படி போக முடியுமா? நம் ஆட்கள் போயுள்ளனர். போனவர்களை அதே வேகத்தில் திருப்பி அனுப்பியுள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு. 


1950 ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணி, போட்டித் தொடரில் பங்கு பெறுவதை ஃபிபா அனுமதிக்கவில்லை. காரணம் அன்றைக்கு இந்திய அணிக்காக களம் இறங்கிய வீரர்கள் கால்பந்துக்காக அன்றைக்கு பயன்படுத்தப்பட்ட ஷூக்கள் தங்களுக்கு சௌகரியமாக இல்லை. அதனை காலில் அணிவதால் அசௌகரியமாக உள்ளது. எனவே நாங்கள் கால்பந்துக்கான பிரத்யேக ஷூக்களை அணியவில்லை என தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் ஃபிபா நிர்வாகம் பலமுறை எடுத்துக் கூறியும் இந்திய அணி நிர்வாகம் கேட்காததால், இந்திய அணியை 1950ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அதற்குப் பிறகு இந்திய அணி ஃபிபா உலகக் கோப்பை போட்டித் தொடருக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு இந்திய அணி செய்ததை இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு என பலரும் பாராட்டி உள்ளனர். 


ஆனால் இதற்கு முன்னதாக 1948ல் சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் இந்திய அணி காலில் ஷூ அணியாமல், வெறும் காலுடன் களம் இறங்கியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு காலில் காயங்கள் ஏற்படாமல் இருக்க துணிகளைக் கொண்டு கால்கள் கட்டப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 


ஆனால் இந்த விவகாரத்துக்கு இந்திய கால்பந்து அணி நிர்வாகத்திடம் போதுமான நிதி இல்லாத காரணத்தால் தான் வீரர்களுக்கு ஷூ வாங்கித் தர முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் அன்றைக்கு பிரதமாரக இருந்த ஜவஹர்லால் நேரு தனது உடைகளை டிரைவாஷ் செய்ய பாரீஸ்க்கு அனுப்பியுள்ளார். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. 


தியான் சந்த் & பி.டி. உஷா


இருப்பினும், வரலாற்றாசிரியரும் புள்ளியியல் நிபுணருமான கௌதம் ராய் மிகவும் தனித்துவமான மற்றூம் நிதர்சனமான கருத்தைக் கொண்டிருந்தார். "அப்போது, ​​இந்தியர்கள் ஷூ அணிந்து விளையாடும் பழக்கம் இல்லை, அதனால்தான் பெரும்பாலான கால்பந்து வீரர்கள் அந்த போட்டியின் போது காலணிகளை அணியவில்லை," என்று அவர் எழுதினார். 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் யூகோஸ்லாவியாவுக்கு எதிராக 1-10 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகுதான் இந்திய கால்பந்தில் ஷூ கட்டாயமாக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு, 1936 ஒலிம்பிக் போட்டிகளில், ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த், இரண்டாவது பாதியில் தனது கூரான ஷூக்கள் மற்றும் காலுறைகளை அகற்றிவிட்டு, இறுதிப் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக வெறுங்காலுடன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்திய தடகள வீராங்கனையான பி.டி. உஷா தனது பயிற்சி காலத்தில் வெறும் கால்களில் பயிற்சி மேற்கொண்டதால், சர்வதேச போட்டிகளில் பங்குபெறும் போதும் ஷூ அணியாமல் வெறும் காலிலேயே பங்குபெற்றார். ஆனால் தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இவர், மெல்ல மெல்ல தனது கால்களில் ஷூ அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார் என்பதும் வரலாறு.