பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஜான் பியர்ரே ஆடம்ஸ் கடந்த 40 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்து, தற்போது தனது 73வது வயதில் உயிரிழந்தார். அவர் விளையாடிய நைம்ஸ் கிளப் அவரது மரணச் செய்தியை அறிவித்துள்ளது.
1970களில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 22 முறை விளையாடிய ஆடம்ஸ், 1982ஆம் ஆண்டு முழங்கால் அறுவை சிகிச்சை ஒன்றின் போது, மயக்க மருந்து தவறான அளவுகளில் கொடுக்கப்பட்டதால், கோமா நிலைக்குச் சென்றார். அன்றைய தினம், மருத்துவமனைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், மயக்க மருந்து நிபுணர் 8 நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆடம்ஸ் அருகில் அவரது பயிற்சியாளர் கவனித்துக் கொள்ளச் செய்யப்பட்டுள்ளார்.
1990களில் மயக்க மருந்து நிபுணரும், ஆடம்ஸின் பயிற்சியாளரும் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஒரு மாதப் பணி இடைநீக்கம், 750 யூரோ அபராதம் ஆகிய தண்டனைகளைப் பெற்றனர். ``எனக்கு அளிக்கப்பட்ட வேலை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது” என ஆடம்ஸின் பயிற்சியாளர் சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிகழ்வு குறித்து பேட்டியளித்தார்.
முழங்கால் அறுவை சிகிச்சை எதிர்பாராத திசையில் சென்ற பிறகு, 15 மாதங்கள் கடந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஆடம்ஸை சுமார் 40 ஆண்டுகளாக அவரது மனைவி பெர்னாடெட் கவனித்து வந்துள்ளார். ``ஜான் பியர்ரே ஆடம்ஸால் உணர முடியும்; வாசனையை நுகர முடியும். நாய் குலைத்தால் உடலை அசைக்க முடியும். ஆனால் அவரால் பார்க்க முடியாது” என 2007ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் பெர்னாடெட். ஆடம்ஸ் - பெர்னாடெட் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு, பிபிசி நேர்காணலில், பெர்னாடெட் மயக்க மருந்து நிபுணர், பயிற்சியாளர் ஆகியோருக்குத் தண்டனை வழங்கப்பட்டும், மருத்துவமனை சார்பில் மன்னிப்பு தெரிவிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
1948ஆம் ஆண்டு, செனெகல் நாட்டின் டாக்கர் நகரத்தில் பிறந்த ஆடம்ஸ், பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடிய முதல் மேற்கு ஆப்பிரிக்க வீரர்களுள் ஒருவர். அப்போதைய பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஸ்டெபான் கோவாக்ஸ், ஆடம்ஸ், மரியஸ் டிரெசார் ஆகியோர் விளையாடிய ஆட்ட உத்தியைக் ‘கறுப்பின் காவல்’ எனப் புனைப்பெயர் சூட்டி வர்ணித்தார்.
நைம்ஸ் கால்பந்து அணி, `ஜான் பியர்ரே ஆடம்ஸ் மறைந்தார் என்று காலையில் தெரிந்துகொண்டோம். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்கள்’ என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர். ஆடம்ஸ் Nice, Paris Saint-Germain ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியவர். இந்த இரு அணிகளும் அவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அடுத்து நடைபெறும் போட்டியில் ஆடம்ஸுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.