FIFA WORLDCUP 2022: பலமான போர்ச்சுகலை வீழ்த்தி அரையிறுதிக்கு  முன்னேறியதை மொரோக்கோ வீரர் மைதானத்தில் தனது தாயுடன் நடனமாடி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ:


நேற்று இரவு நடந்த மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் மிகவும் பலமான போர்ச்சுகல் அணியை மொராக்கோ அணி 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த மூன்றாவது கால் இறுதிப் போட்டியானது நடப்பாண்டு கால்பந்து தொடரில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்பட்ட போட்டிகளில் ஒன்றாகும்.


இந்நிலையில், நேற்று இரவு நடந்த கால் இறுதிப் போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் போர்ச்சுகல் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத மொரோக்கோ அணி வெற்றி பெற்று, அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 


போட்டியின் 42வது நிமிடத்தில்  யூசுஃப் அடித்த கோலால் மொராக்கோ அணி ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தது. இதன் பின்னர் சாதூர்யமான நேரங்களில் மட்டும் கோல் போட முயற்சித்த மொராக்கோ வீரர்கள், போர்ச்சுகல் வீரர்களை கோல் போடவிடாமல் தடுப்பதிலேயே குறியாக இருந்தனர். ஆனாலும், போட்டியின் முழுமையான நேரத்தில் போட்டியை சமன் செய்யக் கூட போர்ச்சுகல் அணியால் ஒரு கோல் போடமுடியவில்லை. 






இதனால், மொரோக்கோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனால் பெரும் கொண்டாட்டத்தில் இருந்த மொரோக்கோ வீரர்களில், சோபியான் பௌஃபல் தனது தாயாருடன் மைதானத்தில் நடனமாடி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருவரும் மகிழ்ச்சியாக நடனமாடி தங்களது கொண்டாட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போட்டியின் தொடக்கத்தில் போர்ச்சுகலின் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பயிற்சியாளரே முழு காரணம்


கால்பந்து போட்டியைப் பொறுத்தமட்டில் பயிற்சியாளர் முடிவுதான் செயல்படுத்தப்படும். போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ், லீக் சுற்றில் தென்கொரியாவிடம் போர்ச்சுகல் தோல்வியடைந்த போட்டியில் ரொனால்டோவை பாதியில் வெளியேற்றி மாற்று வீரரை  களமிறக்கினார். இதனால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.


இந்த மோதலின் நீட்சி  சூப்பர் 16 மற்றும் காலிறுதி போட்டியிலும் பிரதிபலித்தது. சூப்பர் 16 சுற்றில் களமிறக்கப்படாதபோதே ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இது குறித்து எந்தவிதமான கேள்வியும் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரொனால்டோ களம் இறக்கப்படாததை கண்டித்து, ரொனால்டோவின் மனைவி, ”மைதானம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ரொனால்டோவின் பெயரைச் சொல்லி கத்துவதை நிறுத்தவில்லை, கடவுள் எங்களுக்கு இன்னொரு போட்டியிலும் இதே அதிர்ச்சியை தரட்டும்” என டிவீட் செய்திருந்தார்.


ரசிகர்கள் சோகம்:


தொடர்ந்து ரொனால்டோவை மூன்று போட்டிகளில் அவமானப்படுத்தும் வகையில் நடத்திய பயிற்சியாளரின் உள்நோக்கம், போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை எட்டமுடியாமல் செய்துள்ளது. 37 வயதான ரொனால்டோவுக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை என்பதால் அடுத்த உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், தன்னுடைய உலகக்கோப்பை கனவை கத்தாரில் விட்ட கண்ணீரில் கரைத்துவிட்டார் என்றே கூறவேண்டும். ஏற்கனவே நெய்மரின் பிரேசில் வெளியேறிய நிலையில், தற்போது ரொனால்டோவின் போர்ச்சுகலும் வெளியேறியுள்ளது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.