ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோற்றதை கிண்டலடித்து ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர். 






ஐபில் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் பெங்களூரு அணி லீக் போட்டிகளில் முதல் 8 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் மீதமிருந்த 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது.






தொடர்ந்து 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லாமல் இருக்கும் அந்த அணியின் ஏக்கம் இந்த ஆண்டு முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 






பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் சுற்றில் நேற்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் தோற்றால் போட்டியிலிருந்து வெளியேறி விட வேண்டும். ஜெயிக்கும் அணி 2வது தகுதிச்சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோத வேண்டும் என்பதால் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் வெற்றிக்காக போராட தொடங்கியது. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. 






இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.அதன்படி களம் கண்ட பெங்களூரு அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ராஜத் படிதார் 34, விராட் கோலி 33, மஹிபால் லேம்ரோர் 32 ரன்கள் அதிகப்பட்சமாக எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


தொடர்ந்து 173 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து எட்டி 2வது தகுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. பெங்களூரு அணி ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறியது. 






அந்த அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டனர். அதேபோல் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக அலப்பறை செய்தனர். 




ஏற்கனவே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் தங்கள் அணியை நுழைய விடாமல் தடுத்ததாக சென்னை அணி ரசிகர்கள் கடுப்பில் இருந்தனர். ஆனாலும் இதுவரை கோப்பை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை வெல்லட்டும் என மனதை தேற்றிக்கொண்டனர். ஆனால் பெங்களூரு அணி ரசிகர்கள் செய்த அலப்பறை ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் வன்மத்தை கக்க வைத்துள்ளது. 



சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை தெறிக்க விட்டனர். சமூக வலைத்தளங்களை திறந்தாலே பெங்களூரு அணியை கிண்டலடித்து பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆடிய ஆட்டம் என்ன, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என பாடல்களையும் ஒலிக்க விட்டுள்ளனர்.