தென்னாபிரிக்க அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஃபாப் டூப்லெஸிஸ் தனது அற்புதமான ஃபீல்டிங்க்கு பெயர் போனவர். ஆனால் அந்த ஃபீல்டிங்கே அவருக்கு ஆபத்தாக முடிந்துள்ளது. 


பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs பெஷாவர் ஜல்மி அணிகள் மோதின. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, டேவிட் மில்லர் அடித்த பந்தை பவுண்டரி அருகே ஃபாப் டூப்லெஸிஸ் பந்தினை தடுக்க முயன்றார். அப்போது எதிர் திசையில் ஓடி வந்த முகமத் ஹஸ்னைன் கால் முட்டியில், ஃபாப் டூப்லெஸிஸ் தலை மிக வேகமாக மோதியது.






இந்த மோதலுக்கு பிறகு, சில நிமிடங்கள் மைதானத்தில் அசைய முடியாமல் இருந்த ஃபாப் டூப்லெஸிஸ் பின்னர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அதனால் இரண்டாவது பாதியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு பேட்டிங் செய்ய டூப்லெஸிஸ் வரவில்லை. அந்த அணியும் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் #FafDuplesis என்னும் ஹாஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டானது, ரசிகர்கள் பலர் அவரின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பியதுடன், நலம் பெற வேண்டும் என பிராத்தனைகளை முன்வைத்தனர்.






இந்நிலையில் ரசிகர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஃபாப் டூப்லெஸிஸ் "எனக்கு ஆதரவாக செய்தி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. நான் ஹோட்டலுக்கு திரும்பிவிட்டேன், மீண்டு வருகிறேன். மோதியதில் சில நினைவு இழப்புடன் மூளையதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் நான் நலமாக இருக்கிறேன். விரைவில் களத்திற்கு திரும்புவேன் என நம்புகிறேன். மிகுந்த அன்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.


நேற்று இரவு விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் துரதிஷ்டவசமான நாளாக அமைந்துள்ளது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மயங்கி விழுந்த நிலையில், ஃபாப் டூப்லெஸிஸ் தலையில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் விழுந்தார். ஆனால் நல்ல வேலையாக இருவருமே தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள்.