சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் சாம் கரண் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார். மேலும், டி20 உலகக்கோப்பையிலும் அவர் விளையாடமாட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சாம் கரணுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக சாம் கரண் டி 20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2021 இன் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
சாம் கரண் முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஐபிஎல் 2021 மற்றும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், சாம் கரண் பேசும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் காத்திருப்பு வீரராக தேர்வு செய்யப்பட்ட சாமின் சகோதரர் டாம் கரண், தற்போது இங்கிலாந்தின் டி 20 உலகக் கோப்பை அணியில் சாம் கரணுக்கு பதில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி இப்போது ரிசர்வ் வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இங்கிலாந்து அணியில் சேருவார்.
அடுத்த இரண்டு நாட்களில் இங்கிலாந்து செல்வார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், "ஐபிஎல் தொடரில் விளையாடத இங்கிலாந்து வீரர்களும், நிர்வாகத்தினரும் இன்று மஸ்கட் வந்தார்கள். போட்டியின் தொடக்கத்திற்காக துபாய்க்கு செல்வதற்கு முன்பு அக்டோபர் 16 வரை ஓமனில் இருப்பார்கள்" என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டி 20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி - இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் குராண், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் விலே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.
ரிசர்வ் வீரர்கள்: லியாம் டாசன், ரீஸ் டாப்லி, ஜேம்ஸ் வின்ஸ்.