உலகப்புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி 129 ரன்களை குவித்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேற்றை ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழந்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், ஜானி பார்ஸ்டோவும் களத்தில் இருந்தனர்,


மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து ஆடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். இந்த தொடர் தொடங்கியது முதல் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இதுவாகும். முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்சில் 64 ரன்கள் குவித்திருந்த ஜோ ரூட், அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தனி ஆளாக போராடி 109 ரன்களை குவித்தார். தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.




இங்கிலாந்து கேப்டனான ஜோ ரூட் 2021ம் ஆண்டு முதல் இதுவரை 19 இன்னிங்சில் ஆடியுள்ளார். அவற்றில் இந்தாண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் 228 ரன்களையும், 186 ரன்களையும் அடித்திருந்தார். பின்னர், சென்னையில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 218 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். ஆனால், அதன்பிறகு, ரூட் ஆடிய 11 இன்னிங்சில் ஒரு இன்னிங்சில் கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை. இந்திய தொடருக்கு முன்பு நியூசிலாந்திற்கு எதிராக இங்கிலாந்து ஆடிய போட்டியிலும் அவர் இரு இன்னிங்சிலும் சேர்த்து 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.


இதனால், அவரது பார்ம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. தற்போது, இந்தியாவிற்கு எதிரான தொடர் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு ரூட் பதிலடி அளித்துள்ளார். 2021ம் ஆண்டு மட்டும் ஜோ ரூட் இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1,112 ரன்களை குவித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் அதிகபட்ச ரன் அடித்த இங்கிலாந்து கேப்டனாக கிரகாம் கூச் திகழ்ந்து வருகிறார். அவர் 1990ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கி 333 ரன்களை குவித்ததே இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து கேப்டனின் அதிகபட்ச ரன் ஆகும்.




ஜோ ரூட்தான் லார்ட்ஸ் மைதானத்தில் மிகவும் குறைந்த வயதிலே இரட்டை சதம் அடித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு இரட்டை சதமும், இரு சதமும், ஒருநாள் போட்டியில் ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜோ ரூட் இந்தியாவிற்கு எதிராக மட்டும் இதுவரை 2010 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த டெஸ்ட் போட்டி மூலம் ஜோ ரூட் புதிய மைல்கல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக இதுவரை ஆடிய வீரர்களிலே முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 ஆயிரத்து 472 ரன்களை குவித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த முன்னாள் கேப்டன் கிரகாம் கூச்சை ஜோ ரூட் இந்த டெஸ்ட் போட்டியில் பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரூட் 107 போட்டிகளில் ஆடி8 ஆயிரத்து 969 ரன்களை குவித்துள்ளார். கிரகாம் கூச் 8 ஆயிரத்து 900 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.