அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் அடுத்த தலைமுறையினருக்கான வீராங்கனைகள் உருவெடுப்பார்கள். அதேபோல, இந்த தொடரிலும் புதிய நட்சத்திரங்கள் உருவாகியுள்ளது.


இந்த தொடரில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ரடுகானு பங்கேற்றார். 18 வயதே ஆன எம்மா ரனுகாடு இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு தரவரிசையில் 361வது இடத்தில் இருந்தார். தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதன் மூலமே எம்மா ரடுகானு, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.




தனது சிறப்பான ஆட்டத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்ற எம்மா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நேற்று அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், எம்மா ரடுகானு கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரியுடன் மோதினார்.


இந்த போட்டியில் எம்மா 6-1, 6-4 என்ற நேர்செட்டில் கிரீஸ் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். எம்மா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் பெண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் தொடரில் 44 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரிட்டன் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். எம்மா இறுதிப்போட்டியில் லைலா பெர்ணாண்டசுடன் மோத உள்ளார். லைலா பெரணாண்டோசிற்கு 19 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் பதின்ம வயது வீராங்கனைகள் மோதிக்கொள்வது 22 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 


இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள எம்மா ரடுகானுவின் தந்தை ரோமன் நாட்டைச் சேர்ந்தவர், தாய் சீனாவைச் சேர்ந்தவர். எம்மாவின் குடும்பம் எம்மாவிற்கு 2 வயது இருக்கும்போதே பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து விட்டனர். எம்மா டென்னிஸ் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு பாலே, குதிரையேற்றம், நீச்சல், கூடைப்பந்து, கோகார்ட்டிங் போன்ற போட்டிகளிலும் பயிற்சி செய்துள்ளார்.


இதையடுத்து, தனது 5 வயது முதலே டென்னிஸ் பயிற்சியை மேற்கொண்டார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள எம்மா ரனுகாடு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இந்த தொடரில் தகுதிப் பெற்ற பிறகுகூட தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று எம்மா ரனுகாடு எதிர்பார்க்கவில்லை.




இதனால், தொடரில் இருந்து வெளியேறிய பிறகு நாடு திரும்புவதற்காக விமானத்தில் பயணச்சீட்டையும் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்துள்ளார். தற்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் அந்த விமான பயணச்சீட்டை ரத்து செய்துள்ளார். இந்த வெற்றி பற்றி கருத்து தெரிவித்த எம்மா ரனுகாடு, தனக்கு வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் இல்லை என்றும், அழுத்தங்கள் எல்லாம் நமக்குள் இருந்துதான் வருகிறது என்றும், முடிவுகளைப் பற்றிய எந்த அழுத்தமும் எனக்கு இல்லை என்றும் கூறினார். இந்த வெற்றி மூலம் எம்மா ரனுகாடு உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள மற்றொரு 19 வயது வீராங்கனையான லைலா பெர்ணாண்டோஸ் கனடா நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு கால்பந்து வீரர் ஆவார்.