ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் பிரபல தொழிலதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமமன எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் வாங்குவதாக கூறியிருந்தார். எனினும் அவர் தன்னுடைய ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார். இதன்காரணமாக இவர் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. ட்விட்டரை வாங்குவேன் என்று எலோன் மஸ்க் கூறியிருந்தது முதல் அவர் ட்விட்டர் தளத்தில் போடும் பதிவுகள் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது அவர் போட்டுள்ள பதிவு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


இந்நிலையில் எலோன் மஸ்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று இரண்டு பதிவுகளை செய்துள்ளார். அதில் முதலில், “குடியரசு கட்சியின் இடது பக்கத்தையும், ஜனநாயக கட்சியின் வலது பக்கத்தையும் நான் ஆதரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை இதற்கு அடுத்த பதிவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


 






அந்தப் பதிவில், “நான் அடுத்து மான்செஸ்டர் யூனைடட் அணியை வாங்க உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவை கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் வைரலாக்கி வருகின்றனர். 


மான்செஸ்டர் யூனைடட் அணி:


இங்கிலீஷ் கால்பந்து பிரிமியர் லீக் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யூனைடட் அணி. இந்த அணி 20 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அத்துடன் ஐரோப்பிய கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது. இந்த அணியில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இடம்பெற்றுள்ளார். 


2005ஆம் ஆண்டு மான்செஸ்டர் யூனைடட் அணியை கிளேசர்ஸ் 955 மில்லியன் டாலருக்கு வாங்கியது. தற்போது பங்குச்சந்தையில்  மான்செஸ்டர் அணியின் மதிப்பு சுமார் 2.08 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு ஐரோப்பியன் சூப்பர் லீக் தொடரிலிருந்து மான்செஸ்டர் அணி விலக முயற்சி செய்தது. அப்போது முதல் அந்த அணியின் நிர்வாகமான கிளேசர்ஸ் மீது பலரும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் அந்த அணியை வேறு ஒருவர் வாங்க வேண்டும் என்று கூறி வந்தனர். இந்தச் சூழலில் எலோன் மஸ்கின் ட்வீட் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  


 




இதைத் தொடர்ந்து இந்த ட்வீடிற்கு ஒருவர் உண்மையாகவா கூறுகிறீர்கள் என்று கேட்டார். அவருடைய பதிவிற்கு எலோன் மஸ்க்  பதிலளித்துள்ளார். அதில், “இது உண்மை இல்லை. ட்விட்டரில் நீண்ட நாட்களாக பகிரப்பட்டு வரும் ஜோக். நான் எந்தவித விளையாட்டு அணியையும் வாங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண