உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி பைனல்ஸ் எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் டாப்-8l இருக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஏ.டி.பி. பைனல்ஸ் என்ற ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலி நாட்டின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களை ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரித்து போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் டேனில் மெட்வதேவ் ஆகியோர் 'ரெட்' (சிவப்பு) பிரிவிலும், ரபேல் நடால், காஸ்பர் ரூட், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் மற்றும் டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் 'கிரீன்' (பச்சை)பிரிவிலும் உள்ளவாறு பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவில் உள்ள வீரர்கள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். அந்த வகையில் ரெட் பிரிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
முன்னதாக நேற்று நடந்த போட்டியில் நோவக் ஜோகோவிச், டேனில் மெட்வதேவ்வை 6-3, 6-7 (5-7), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (5), 7-6 (6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தினார். இதன் மூலம் டெய்லர் பிரிட்ஸ்ஸை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.
கிரீன் பிரிவுக்கான மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று காஸ்பர் ரூட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் இறுதிப் போட்டியில் ஜோகோவிச் மற்றும் காஸ்பர் ரூட் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
ஏற்கனவே ஜோகோவிச் 7 முறை இந்த போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இம்முறை அவர் 8வதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.