சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடிய நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி சேஸிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய சென்னை 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு தொடக்கமே சறுக்கல்.
5.2 ஓவர் முடிவில், 31-5!
சுபம் கில், நிதிஷ் ராணா, இயன் மோர்கன், சுனில் நரேன், ராகுல் திரிபாதி என கொல்கத்தாவின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினர் சாஹார் மற்றும் நிகிடி.
பஞ்சாப் - ராஜாஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சென்னையின் வழக்கமான ‘கடைசி ஓவர்’ வெற்றியாக இல்லாமல், போட்டி முழுவதுமே வெற்றியே தன்வசப்படுத்தி இருந்தது சென்னை.
ஆனால், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நடந்ததே வேறு!
5வது விக்கெட்டிற்கு பிறகு, 171 ரன்களை அடித்து குவித்திருக்கிறது கொல்கத்தா அணி. ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே, ஐந்தாவது விக்கெட் வீழ்ந்த பிறகு அதிக ரன் எடுத்த அணியானது கொல்கத்தா. மூழ்கி கொண்டிருந்த கொல்கத்தாவின் படகை மீட்க முதலில் களமிறங்கியது ரஸல். ஐந்து ஓவர்களில் நடந்து கொண்டிருந்ததை அவர் காணவில்லை போல, இல்லை இல்லை கண்டதால்தான் அதிரடியை காட்ட களமிறங்கினார் போல, வந்தவுடன் முதல் பந்திலேயே பவுண்டரி! நிகிடி வீசிய 6வது ஓவரில், 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் என 14 ரன்களுடன் சரவெடியாய் விளையாடத் தொடங்கினார். ரஸலுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், தன் பங்கிற்கு ரன்களை வழங்கினார்.
ரஸலின் ரன் வேட்டையை தடுக்க சென்னை பவுலர்களுக்கு நேரமானது. 12வது ஓவர் வீசிய சாம் குரான் அதை நிறைவேற்றினார்.! சற்றும் எதிர்பாராத ரஸல், குரானின் சூப்பர் பந்தில் க்ளீன் பவுல்ட். வெற்றி பெற 100 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்படும் நேரத்தில் களமிறங்கிய கம்மின்ஸ், கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை தர களமிறங்கிய இரண்டாவது மீட்பர். கம்மின்ஸ் களமிறங்கும் வரை, சென்னை அணிக்கு சாதகமான போட்டியை கொல்கத்தாவின் பக்கம் இழுத்தார் கம்மின்ஸ். போராட்ட ஆட்டம் இல்லை, வெறியான ஆட்டம்! 40 ரன்கள் எடுத்திருந்தபோது தினேஷ் கார்த்திக்கும் வெளியேற, ஒன் மேன் ஆர்மியாக சென்னைக்கு பயம் காட்டினார் கம்மின்ஸ்.
குரான் வீசிய 16வது ஓவரில், 4 சிக்சர்கள், 1 பவுண்டரி என மொத்தம் 30 ரன்கள்! இந்த ஒரு ஓவர் போதும், கம்மின்ஸின் தாண்டவத்தை விவரிக்க. வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் அதே சமயம் பொறுப்பாகவும் ஆடினார் கம்மின்ஸ். முடிந்த வரையில், சிங்கிள்ஸை டபுள்ஸாக மாற்றினார். மறு முனையில் இருந்த பேட்ஸ்மேன்களும் கம்மின்ஸை ஸ்ட்ரைக்கிங் எண்டில் நிறுத்த ஓடினர். போட்டியின் ஒரு கட்டத்தில், வழக்கமான ‘நெயில் பைட்டிங்’ முடிவாக இருக்கபோகிறது என உணர்ந்த சென்னை அணி ரசிகர்களும், கம்மின்ஸின் அதிரடியை பயத்துடன் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால், நாகர்கோட்டி, வருண் சக்கிரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா என டெயில் எண்டர்களால் நீண்ட நேரம் கம்மின்ஸிற்கு துணை நிற்க முடியவில்லை. எனினும், ஸ்ட்ரைக்கிங் எண்டில் நிற்கும் போதெல்லாம் ரன்களை குவித்த கம்மின்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
கம்மின்ஸ் அடித்த 66* ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் வீரர் அடித்த அதிக ரன்களானது. சென்னை அணியைப் பொறுத்தவரை, 64 ரன்கள் எடுத்த ருத்துராஜ் கேக்வாட் மீண்டும் நம்பிக்கை தருகிறார். டு ப்ளெஸிஸின் 95*, மொயின் அலியின் சிறிது நேர அதிரடி, தோனியின் விண்டேஜ் சிக்ஸர் என நேற்று பேட்டிங்கில் பேட்ஸ்மேன்கள் அசத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில், பவர் ப்ளே ஹீரோவானார் சாஹர். இந்த சீசன் அவருக்கு சிறப்பாக தொடங்கி உள்ளது. ஹாட்-ட்ரிக் வெற்றிகளை பதிவு செய்திருக்கும் சென்னை, இப்போது புள்ளி பட்டியலில் முதல் இடம்! சென்னை அணிக்கு, மும்பையில் நடக்க இருக்கும் கடைசி போட்டியில், ஏப்ரல் 25-ஆம் தேதி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.