நியூசிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர் ரச்சிக் ரவீந்திராவிற்கு, போட்டி ஒன்றின் போது படுகாயம் ஏற்பட்டதால், மைதானத்தை விட்டு ரத்த வெள்ளத்தில் வெளியேறிய சம்பவம், ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி


சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு அணிகளும் தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில், அந்நாட்டு அணியும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் தொடங்கியுள்ளன. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதின.


படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் வெளியேறிய ரச்சின் ரவீந்திரா


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 330 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து, 331 ரன்கள் என் இலக்குடன் பாகிஸ்தான் அணி ஆடி வந்தது. போட்டியின் 38-வது ஓவரில், பாகிஸ்தான் இடதுகை வீரர் குஷ்தில் ஷா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க ரச்சின் முயன்றார். அப்போது, மைதானத்தில் இருந்த டவர் லைட்டின் ஒளி அவரது கண்களை மறைத்ததால், அவரால் கேட்ச் பிடிக்க முடியவில்லை. அப்போது, பந்து அவரது கண்களுக்கு அருகில், நெற்றியை பதம் பார்த்தது. இதனால் நெற்றியில் வெட்டுப்பட்டு, அதிக அளவில் ரத்தம் வெளியேறியது.


உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் வந்து பார்த்துவிட்டு, படுகாயமடைந்த அவரது நெற்றியில், ஐஸ் கட்டியுடன் சுற்றப்பட்ட துண்டை நெற்றியில் வைத்து அழைத்துச் சென்றனர். முதலுதவிக்குப்பின் அவருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏதும் இல்லை என கூறப்படுகிறது.


சிஎஸ்கே ரசிகர்கள் கவலை


இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் கலக்கிய ரச்சின் ரவீந்திரா, அதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இந்தியா வந்து, ஒரு மைதானத்தையே வாடகைக்கு எடுத்து பயிற்சி செய்துள்ளார். இதனால், போட்டிகளில் அவர் தூள் கிளப்பியதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகமாயினர். அதோடு, அவரது குடும்பம் இந்திய வம்சாவளி என்பதால், ரசிகர்களுக்கு கூடுதல் பாசம் ஏற்பட்டது.


விரைவில் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கு பிறகு தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்திரா விளையாட உள்ளார். இந்நிலையில், தற்போது அவர் படுகாயமடைந்த தகவல் அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள், எங்க ஆள சாய்ச்சுப்புட்டீங்களே என்பதுபோல் கவலை அடைந்துள்ளனர். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே, அவர் பூரண நலமடைய வேண்டும் என்பதே, ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரின் வேண்டுதலாக உள்ளது.