"4 மாதத்தில் கம்பேக் கொடுப்பேன்" என தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக தகவலை பகிர்ந்துள்ளார். தமிழக வீரர் நடராஜன் அண்மையில் ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டு இருந்த போது, முழங்கால் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜன் தற்போது தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பதிவிட்டிருந்தார் நடராஜன். 






இது குறித்து ABP நாடு செய்திகளுக்கு ப்ரத்யேகமாக பேசிய நடராஜன் "ரீஹாப் ஸ்டார்ட் பண்ணிட்டேன், இன்னும் 4 மாத காலத்தில் ஃபுல்லா ரெடியாகி களத்திற்கு திரும்பிடுவேன்" என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.


ஒரு காயத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் திரும்பி கம்பேக் கொடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம், அது குறித்து கேட்டபோது "காயத்திற்கு பின்பு திரும்புவதில் எந்த கஷ்டமும் உணரவில்லை, ஏற்கனவே நான் முழங்கை அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளேன், அதையெல்லாம் பாக்கும்போது இது ஒன்னுமே இல்லை, அதனால சீக்கிரமே கம்பேக் குடுத்துருவேன்" என்கிறார்.



ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரும் தற்போது செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்க உள்ள நிலையில், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை நடைபெறும் நேரத்தில் நடராஜன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாக அமைந்துள்ளது. 



கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நிறைந்து காணப்படும் நிலையில் நாம் அனைவருமே தன்னம்பிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது மிக பெரிய தவறு என நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "எங்க அப்பா, அம்மா கூட வாக்சின் போட்டுக்க பயப்புடுறாங்க, கிராமப்புறங்கள் தடுப்பூசி போட்டுக்க பயப்புடுறாங்க, அவுங்களை கன்வின்ஸ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு, கண்டிப்பா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கணும், போடாம இருக்குறதுலாம் ரொம்ப தப்பு, ஸ்ட்ராங் ஆன மைண்ட் இருந்தா தான் நம்மால இதுல இருந்து வெளில வர முடியும்" என நடராஜன் தெரிவித்துள்ளார்.


மேலும் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை, கொரோனா எல்லாருக்கும் வரும் அதனால் மாஸ்க், கிருமி நாசினி பயன்படுத்தனும், மேலும் "வெளியில போறப்ப ரொம்ப பாதுகாப்பா இருங்க, முக்கியமான function கூட அவாய்ட் பண்ணுங்க தவறில்லை, அப்டியே வெளியில போனாலும் பாதுகாப்பா போயிட்டு வாங்க, முக்கியமா தன்னம்பிக்கையை விட்டுராதீங்க" என தமிழக வீரர் நடராஜன் அனைவருக்கும் தன்னம்பிக்கை அளித்துள்ளார்.