வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் அடிப்படையில், தொடக்க வீரராக தேஜ்நரின் சந்தர்பாலும், பிராத்வெயிட்டும் களமிறங்கினர். முதல் விக்கெட்க்கு சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 336 ரன்கள் குவித்தனர். சந்தர்பால் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராத்வெயிட் 182 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தடுத்து 5 விக்கெட்கள் விழ, வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜிம்பாப்வே அணி சார்பில் பிராண்டன் மவுடா 5 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
கேரி பேலன்ஸ்:
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரார் இன்னசண்ட் 67 ரன்கள் எடுக்க, பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கேரி பேலன்ஸ் முதல்முறையாக ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஜிம்பாப்வே அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தாலும் பொறுப்புடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேரி பேலன்ஸ் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம், இரண்டு நாடுகளுக்காக டெஸ்ட் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கேரி பேலன்ஸ் பெற்றார். இதற்கு முன்னதாக இந்த சாதனையை தென்னாப்பிரிக்காவின் கெப்லர் வெசல்ஸ் படைத்திருந்தார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கெப்லர் வெசல்ஸ், ஆஸ்திரேலியாவுக்காக நான்கு சதங்களும், தென்னாப்பிரிக்காவுக்காக இரண்டு சதங்களும் அடித்துள்ளார்.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணிக்காக கேரி பேலன்ஸ் 4 சதங்களும், தற்போது ஜிம்பாப்வே அணிக்காக 1 சதமும் அடித்துள்ளார். இன்னும் இரண்டு சதங்கள் அடித்தால் இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கேரி பேலன்ஸ் பெறுவார்.
டிரா ஆகவே வாய்ப்பு:
ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்களுக்குள் டிக்ளேர் செய்தது. கேரி பேலன்ஸ் ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் எடுத்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும், குடாகாஷ் மோடே, ஹோலட்ர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நான்காம் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஜந்தாம் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறைந்தபட்சம் 45 ஓவர்கள் விளையாடி இன்னிங்ஸை டிக்ளேர் செய்து, ஜிம்பாப்வேக்கு எதிராக சேஸ் செய்யக்கூடிய இலக்கை நிர்ணயித்தால் போட்டி முடிவு தெரியும். ஆட்டத்தின் விக்கெட்களை பொறுத்தே, போட்டி யார் பக்கம் என்பது தெரியும். இந்த போட்டியானது அதிகபட்சமாக டிரா ஆகவே வாய்ப்புள்ளது.